3463.ஒரு மகள் தனிமையை
     உன்னி, உள்உறும்
பருவரல் மீதிடப்
     பதைக்கும் நெஞ்சினான்,
பெருமகன் தனைத் தனிப்
     பிரிந்து பேதுறும்,
        திரு நகர்ச் செல்லும்,
     அப்பரதன் செய்கையான்.

    ஒரு மகள் - ஒப்பற்ற சீதையது; தனிமையை உன்னி -
தனித்திருக்கும் நிலையை எண்ணி; உள் உறும் - மனத்தில் பொருந்திய;
பரு வரல் மீதிட - துன்பம் மிகுதிப்படுவதால்; பதைக்கும் நெஞ்சினான் -
துடிக்கின்ற மனத்தை உடைய (இலக்குவன்); பெருமகன் தனை -
அண்ணனாகிய, (இராமனைப்); தனிப் பிரிந்து பேதுறும் - பிரிந்து தனித்து
வருந்துகிற; திருநகர்ச் செல்லும் - அயோத்திக்குச் செல்ல வேண்டிய
(கட்டாயத்துக்கு உள்ளான); அப்பரதன் செய்கையான் - அந்தப் பரதனின்
செயல் போன்ற செயலுடையவனாய்....... (அடுத்த பாடலில் வரும் விரைவில்
செல்கின்றான் என முடியும்).

     இராமனை அயோத்திக்குத் திருப்பி அழைத்துச் செல்ல சித்திர
கூடத்துக்கு வந்த பரதன். இராமன் ஆணையிட்டதைத் தவிர்க்க முடியாமல்
கோசலம் மீண்டான். 'மெய்ம்மையால் என்ற சொல்லையும், அந்த நாள்
எலாம் ஆள் என் ஆணையால்' (2490) 'நீ என் ஆணையை
மறுக்கலாகுமோ சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான்'
(2491) என்ற சொல்லையும் மறுக்க முடியாது மனம் இல்லாமல் நந்தியம்
பதியிடை நாதன் பாதுகம் செந் தனிக் கோல் முறை செலுத்த அந்தியும்
பகலும் நீர் அறாத கண்ணினனாய் (2514) பரதன் இருந்தது போல
இலக்குவனும்

     'போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து கேடு
     ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து
     "ஏகு" என்றீர்; இருக்கின்றீர் தமியிர்', என்று பின்
     வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் (3334)

     என்று சீதையிடம் கூறிச் சென்ற கட்டளையை மறுக்க முடியாத
நிலையை இங்குப் 'பரதன் செய்கையான்' என்ற உவமையால் கவிஞர்
விளக்கியுள்ளார். கட்டளையை மறுக்க இயலாமை, வருத்தம் என்பவை
பரதன் இலக்குவன் இருவருக்கும் பொதுத் தன்மையாதலை உணர்க.
பருவரல் - துன்பம்.                                           61