3464.தெண்திரைக்கலம் என
     விரைவில் செல்கின்றான்;
புண்டரீகத் தடங்காடு
     பூத்து, ஒரு
கொண்டல் வந்து இழிந்தன
     கோலத்தான்தனைக்
கண்டனன்; மனம் எனக்
     களிக்கும் கண்ணினான்.

     தெண்திரைக் கலம் என - தெளிந்த அலைகளை உடைய கடலில்
ஓடும் மரக்கலம் போல; விரைவில் செல்கின்றான் - வேகமாகச்
செல்கின்றவனாகிய இலக்குவன்; புண்டரிகத் தடங் காடு பூத்து -
செந்தாமரை மலர்கள் நிறைந்த பெரிய காடு ஒன்று பூத்தல் பெற்று; ஒரு
கொண்டல் வந்து இழிந்தன -
ஒப்பற்ற கருமேகம் வந்து இறங்கியது
போன்ற; கோலத்தான் தனை - திருமேனி அழகு உடைய (இராமனை);
கண்டனன் - கண்டான்; மனம் எனக் களிக்கும் கண்ணினான் - தன்
மனம் போலவே மகிழ்ச்சி அடையும் கண்களை உடையவனானான்.

     விரைவாகச் சென்ற இலக்குவன், இராமனைக் கண்டான் என்க.
இராமனின் உடல் நிற அழகுக்குக் கருமேகமும், கண், கை, பாதம், வாய்,
உந்தி ஆகியவற்றிற்குச் செந்தாமரை மலர்த் தொகுதியும் உவமையாக
வந்தன. இராமனைக் கண்ட இலக்குவன் மனம் களித்தது போன்றே தரிசித்த
கண்ணும் களித்தது என்க. புண்டரீகம் - செந் தாமரை, செல்கின்றான் -
முற்றெச்சம். தடங்காடு - உரிச்சொல் தொடர்.                       62