3465.'துண்ணெனும் அவ் உரை
     தொடர, தோகையும்,
பெண் எனும் பேதைமை
     மயக்க, பேதினால்
உள் நிறை சோரும்'
     என்று, ஊசலாடும் அக்
கண்ணனும் இளவலைக்
     கண்ணுற்றான் அரோ.

    துண்ணெனும் - கேட்பவர் அஞ்சித் திடுக்கிடும் படி (வெளிப்பட்ட
மாரீசனது); அவ்உரை - அந்த (மாயமானின்) சொல்; தொடர - தன்
செவியில் சென்று பட; தோகையும் - மயில் போன்ற சாயலை உடைய
சீதையும்; பெண் எனும் பேதைமை மயக்க - பெண்மை என்கிற அறியாத
தன்மையின் மயக்கத்தால்; பேதினால் - (உண்டாகும்) (மன) வேறு
பாட்டினால்; உள் நிறை சோரும் என்று - மன உறுதி குலைவாள் என்று;
ஊசலாடும் அக்கண்ணனும் - மனத் தடுமாற்றத்தால் வருந்தும் (அந்தக்)
கருநிறம் உடைய இராமனும்; இளவலைக் கண்ணுற்றான் - (தன்)
தம்பியாகிய இலக்குவனைப் பார்த்தான்.

     மாரீசனின் மாயக் குரல் கேட்டு்ப் பெண்மைக்கு உரிய பேதைமையால்
சீதை மனம் தடுமாறி வருந்துவாள் என எண்ணித் தடுமாறி வருந்திய
இராமன் இலக்குவனைக் கண்டான். இலக்குவன் இராமனைத் தேடிவரும்
போது இராமன் மாரீசனது குரலால் சீதை மயங்கி வருந்துவாள் என
விரைந்து பர்ணசாலையை நோக்கி வர, இருவரும் இடையில் சந்தித்தனர்
என்க. பேதினால் - வேறுபாட்டால். அரோ - ஈற்றசை.               63