எழுசீர் ஆசிரிய விருத்தம்

3466.புன் சொற்கள் தந்த பகுவாய் அரக்கன் உரை
     பொய் எனாது, புலர்வாள்,
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ,
     நிலை தேர வந்த மருளோ?
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
     உடையேன் மருங்கு, தனியே,
என்சொல் கடந்து, மனமும் தளர்ந்த
     இள வீரன் வந்த இயல்பே.

    என் சொல் கடந்து - சீதையைக் காப்பாய் என்று நான் கூறிய
சொல்லை மீறி; மனமும் தளர்ந்த இளவீரன் - மனத் தளர்ச்சியொடு
கூடிய இளைய வீரனாகிய (இலக்குவன்); தன் சொல் கடந்து - (இது
உண்மையான மானல்ல மாயமான் என்று) தான் கூறிய சொற்களைக்
கேட்காது மீறி; தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு - (அம்
மாயமானின் குரல் என்ன துன்பம் தருமோ என்று) சோர்கின்ற மனத்தை
உடையவனாகிய, என்னை(த்தேடிப்) பக்கத்திற்கு; தனியே வந்த இயல்பே -
தனித்து வந்த நிலையானது; மடமங்கை - பேதைப் பண்புள்ள சீதை;
புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன் உரை பொய் எனாது - பொய்ச்
சொற்களைக் கூறிய பிளவுபட்ட வாயை உடைய அரக்கனாகிய (மாரீசனது)
சொற்கள் பொய்ம்மையும் வஞ்சனையும் உடையவை என்று கருதாது;
புலர்வாள் - (உடலும் உள்ளமும்) வாடுபவள் ஆகிய சீதை; வன்சொற்கள்
தந்து -
கடுமையான சொற்களைச் சொல்லி; ஏவ - ஏவியதால்; நிலை
தேரவந்த மருளோ -
(என் நிலை பற்றித்தான் அறிந்தவனாயினும்
சீதையின் பொருட்டு) என் தன்மையை அறிய வந்த மயக்கச் செயலோ?
(அடுத்த பாடலில் தொடரும்).

     இலக்குவன் இது மாயமான் என்று கூறியதைக் கேட்காது "இல்லாத
தில்லை இளங்குமரா" என மானைத் தொடர்ந்து சென்று உண்மை அறிந்து
எய்து வீழ்த்த, அவ்வரக்கன் வஞ்சனைச் சொல்லெழுப்பினான். அது கேட்ட
சீதை பெரிய பேதைமைப் பெண்மையால் எனக்குத் தீங்கு என வருந்தி ஏவ,
என் சொற்கடந்து இலக்குவன் வருகின்றானோ என இராமன் மனந்தளர்ந்து
கருதினான் என்க.                                             64