3467. என்று உன்னி, 'என்னை விதியார் முடிப்பது?'
     என எண்ணி நின்ற இறையை,
பொன் துன்னும் வில் கை இள வீரன்
     வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில்,
மின்துன்னு நூலின் மணி மார்பு
     அழுந்த, விரைவோடு புல்லி, உருகா-
நின்று, 'உன்னி வந்த நிலை என்கொல்?'
     என்று, நெடியோன் விளம்ப, நொடிவான்:

    என்று உன்னி - என்று நினைத்து; 'விதியார் முடிப்பது என்னை'
என எண்ணி நின்ற -
ஊழ்வினை முடிக்கும் செயல் யாதோ என்று
எண்ணிப் பார்த்து நின்ற; இறையை - இராமனை; பொன்துன்னும் வில்
கை இள வீரன் -
அழகு நிறைந்த வில்லைக் கையில் ஏந்திய
இளவீரனாகிய இலக்குவன்; வந்து புனைதாள் இறைஞ்சு பொழுதில் -
வந்து நெருங்கி அழகிய திருவடிகளை வணங்கும் பொழுதில்; மின் துன்னு
நூலின் மணிமார்பு அழுந்த -
மின்னலை ஒத்து விளங்குகிற முப்புரி நூல்
அணிந்த (தன்) அழகிய மார்பு அழுந்தும்படி; விரைவோடு புல்லி உருகா-
வேகமாகத் தழுவி மனம் உருகி; 'நின்று உன்னி வந்த நிலை
என்கொல்?' -
நின்று (நீ) நினைத்து வந்த' விதத்துக்கு என்ன காரணம்?;
என்று நெடியோன் விளம்ப - என்று இராமன் வினவ; நொடிவான் -
(இலக்குவன்) விடை கூறலானான்.

     ஊழ்வினையால் என்ன கேடு வர இருக்கிறதோ? என்று எண்ணி
நின்ற இராமன், தன் காலில் விழுந்த அழகிய வில் பிடித்த இலக்குவனைத்
தன் முப்புரி நூல் அணிந்த மார்பில் இறுகத் தழுவி, நீ வந்த காரணம்
என்ன என்று கேட்க, அதற்கு இலக்குவன் விடை கூறலானான். புனைதாள்
- வீரக்கழல் புனைந்த தாள் எனினுமாம் விளம்ப - கேட்க, நொடிவான் -
விடை கூறுவான். நெடியோன் - மாபலியை அழிக்க நீண்டவன். உருகா -
செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.             65