3468.'இல்லா, நிலத்தின் இயையாத, வெஞ் சொல்
     எழ, வஞ்சி எவ்வமுற, யான்,
"வல் வாய் அரக்கன் உரை ஆகும்"
     என்ன, மதியாள், மறுக்கம் உறுவாள்,
"நில்லாது, மற்று இது அறி, போதி" என்ன,
     நெடியோய் புயத்தன் வலி என்
சொல்லால் மனத்தின் அடையாள், சினத்தின்
     முனிவோடு நின்று துவள்வாள்,

    நிலத்தின் இல்லா - மண்ணுலகத்தில் இல்லாததும்; இயையாத -
பொருத்தம் இல்லாததும் ஆகிய; வெஞ்சொல் எழ - கொடிய வஞ்சனைச்
சொல் (வந்து காதில்) விழுந்ததனால்; வஞ்சி எவ்வமுற - வஞ்சிக் கொடி
போன்ற சீதை மிக்க துன்பம் அடைய; யான் வல்வாய் அரக்கன் உரை
ஆகும் என்ன -
நான் அச்சொல் வலிய வாயினை உடைய அரக்கனது
சொல்லாகும் என்று சொல்ல; மதியாள் மறுக்கம் உறுவாள் - (என்)
சொல்லை (உண்மை என) மதிக்காமல் கலக்கம் எய்தியவளாகி; மற்று
நில்லாது இது அறிபோதி என்ன -
(இங்கு) நில்லாமல் இதன் உண்மை
என்ன என அறிந்து வரப் போ என்று கட்டளை இட; என் சொல்லால் -
(நான்) என் வாய்ச் சொற்களால்; நெடியோய் புயத்தின் வலி -
நெடியோனாகிய (உன்) தோள் வலிமையை (எடுத்துச் சொல்ல); மனத்தின்
அடையாள் -
(அதனை) தன் மனத்தில் ஏற்றுக் கொள்ளாதவளாய்;
சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் - பெருஞ் சினத்தோடு நின்று
மனந்தளர்பவளாய், (அடுத்த பாடலில் தொடரும்).

     புதுமையான குரலைக் கேட்ட நான், 'இது அரக்கனின் வஞ்சனைக்
குரல்' என்று சொல்லச் சீதை அதை மனதில் ஏற்காது பெருஞ்சினம்
கொண்டு வருந்தி 'நீ இங்கு நில்லாது சென்று உண்மையை அறிந்து வருக'
என்றாள் என்பதாம். எவ்வம் - துன்பம். மறுக்கம் - கலக்கம் துவள்தல் -
தளர்தல். மதியாள் - முற்றெச்சம். போதி - முன்னிலை ஒருமை
வினைமுற்று.                                                 66