3470.'சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது;
     அதையோ, தடுக்க முடியாது;
ஆஆ! அலக்கண் உறுவாள், உரைத்த
     பொருளோ, அகத்தின் அடையாள்;
காவா நிலத்தின் வரும் ஏதம்; மற்று
     அது ஒழியாது; கைக்கொடு அகலப்
போவார், பிரிக்க முயல்வார், புணர்த்த
     பொருள் ஆம் இது' என்று தெருளா,

    சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது - (இவ் இலக்குவன் சீதை
சொற் கேட்டுத் தேடி வராமல் இருந்திருந்தால்) அவள் இறவாதிருக்கும்
தன்மையள் அல்லள் என்று (சொல்லும்) நிலைமை நேர்ந்தது; அதையோ
தடுக்க முடியாது -
(எனவே அவ்வாறு நடக்க வேண்டிய) அந்தச்
செயலையோ தடுக்க இயலாது; உரைத்த பொருளோ - (இலக்குவன்)
உரைத்த உண்மைப் பொருள்களோ; அலக்கண் உறுவாள் - பெருந்துன்பம்
கொண்டவள் ஆகிய சீதையின்; அகத்தின் அடையாள் - மனத்தில்
பதியவில்லை; ஆ ஆ - அந்தோ அந்தோ; காவா நிலத்தின் ஏதம் வரும்
-
காவல் இல்லாத (அந்த) இடத்தில் (சீதைக்குத்) தீங்கு வரும்; மற்று அது
ஒழியாது -
அத்தீங்கு (வராமல்) நீங்காது; கைக்கொடு அகலப் போவார்
-
(சீதையைக்) கைப்பற்றிக் கொண்டு போகக் கருதியவர்கள்; பிரிக்க
முயல்வார் -
(எங்கள் இருவரையும் அவளை விட்டுப்) பிரிக்க
முயன்றவர்கள்; புணர்த்த பொருள் ஆம் இது - செய்த வஞ்சனையாகும்
இச்செயல்; என்று தெருளா - என்று முடிவு செய்து, (அடுத்த பாடலில்
தொடரும்).

     சீதை இறக்காமல் இருக்க வேண்டும் என்றால், இலக்குவன் அவளை
விட்டுப் பிரிந்து என்னைத் தேடி வருவதைத் தவிர வேறு வழியில்லை.
இலக்குவன் கூறிய ஆறுதல் சொற்கள் மனங் கலங்கிய சீதையின்
உள்ளத்தில் பதியவில்லை. காவல் இல்லாமல் இருக்கும் அவளுக்குத்
துன்பம் வந்தே தீரும் என எண்ணுகிறேன். இச்செயல்கள் சீதையைப் பிரிக்க
எண்ணியவர்களின் சூழ்ச்சி' என இராமன் முடிவு செய்தான். அலக்கண் -
துன்பம். அகம் - உள்ளம். தெருளா - முடிவு செய்து. ஆ ஆ - இரக்கக்
குறிப்புச் சொல். காவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மற்று -
அசை.                                                     68