3472. | 'பாணிக்க நின்று பயன் ஆவது என்னை? பயில் பூவை அன்ன குயிலைக் காணின், கலந்த துயர் தீரும்; அன்றி, அயல் இல்லை' என்று, கடுகி, சேண்உற்று அகன்ற நெறியூடு சென்று, சிலை வாளி அன்ன விசை போய், ஆணிப் பசும் பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா, |
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை? - காலம் நீட்டித்துக் கொண்டு இங்கு நின்று ஆகும் பயன் என்ன?; பயில் பூவை அன்ன குயிலை - பழகிய நாகணவாய்ப் பறவை போன்ற குயிலாகிய சீதையைக்; காணின் - கண்டால்; கலந்த துயர் தீரும் - என் மனத்தில் தோன்றிய துன்பம் நீங்கும்; அன்றி அயல் இல்லை - இது தவிர வேறு ஒரு வழியுமில்லை; என்று - என்று கூறி; கடுகி - விரைவாக; சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று - நெடுந்தொலைவு பொருந்தி விரிந்துள்ள வழியில் (நடந்து) சென்று; சிலை வாளி அன்ன விசை போய் - (தன்) வில்லில் இருந்து வெளிப்படும் அம்பினைப் போன்று; வல்லை - (மிக) விரைவாக; ஆணிப் பசும் பொன் அனையாள் - மாற்று உயர்ந்த பசும் பொன்னை ஒத்தவளாகிய சீதை; இருந்த அவிர் சோலை அணுகா - இருந்த (அழகு) விளங்குகிற (பஞ்சவடி என்னும்) சோலையை நெருங்கி.... (அடுத்த பாடலில் தொடரும்). இனி, இங்குக் காலம் நீட்டிப்பதால் பயன் இல்லை. சீதையைக் கண்டாலல்லது என் மனத்துன்பம் நீங்காது' என்று கூறி, இராமன் தன் வில்லில் இருந்து வெளிப்படும் அம்பு போல் விரைந்து போய்ச் சீதை இருந்த பஞ்ச வடியினை அடைந்தான். பாணித்தல் - காலம் நீட்டல், பயில் பூவை - பழகிய நாகண வாய்ப்புள். குயில் - சீதை. ஆணிப்பொன் - மாற்று உயர்ந்த பொன். குயில் - உவமை ஆகுபெயர். இப்பாடலில் இராமன் விரைவாகப் பஞ்சவடியை நோக்கி வருவதற்கு அவனது இராம பாணமே உவமையாக அமைந்துள்ளது. இதை அங்கதன் தூதுப் படலத்தில் பார்மிசை வணங்கிச் சீயம் விண் மிசைப் படர்வதே போல் வீரன் வெஞ்சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான். (கம்ப. 6986) என்று வந்துள்ளதை இணைத்துக் காண்க. 70 |