சீதையைக் காணாது இராமன் திகைத்தல்

கலித்துறை

3473.ஓடி வந்தனன்; சாலையில்,
     சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரி
     குழலாள் தனைக் காணான்;
கூடு தன்னுடையது பிரிந்து,
     ஆர் உயிர், குறியா,
நேடி வந்து, அது கண்டிலது
     ஆம் என, நின்றான்.

    ஓடிவந்தனன் - முற்கூறிய படி விரைவாக இராமன் ஓடி வந்து;
சாலையில் - பர்ணசாலையில்; சோலையின் உதவும் - சோலையில்
(பூத்து) உதவுகிற; தோடு இவர்ந்த பூஞ்சுரி குழலாள்தனை - இதழ்கள்
நெருங்கிய மலர்களை அணிந்த கடை குழன்ற கூந்தலை உடையவள்
ஆகிய சீதையை; காணான் - காணாதவனாகி; ஆர்உயிர் - அருமையான
உயிர்; தன்னுடையது கூடு பிரிந்து - தன்னுடையதான உடலைப் பிரிந்து
சென்று; குறியா நேடி வந்து - (அவ்வுடம்பைக்) குறியாகக் கொண்டு
தேடிக் கொண்டு வந்து; அது கண்டிலது ஆம் என - அவ்வுடம்பைக்
காணாது (திகைத்து) நின்றது போல் எனும் படி; நின்றான் - (இராமன்)
நின்றான்.

     விரைவாகச் சீதை இருந்த பர்ண சாலைக்கு ஓடிவந்த இராமன், அங்கு
அவளைக் காணாது; உடலை விட்டுப் போயிருந்த உயிர் திரும்பி வந்து
தன்னுடலைக் காணாது திகைப்பது போல் திகைத்து நின்றான். தோடு -
இதழ்கள், சுரி குழலாள் - கடை குழன்ற கூந்தலை உடையாள். நேடி -
தேடி. இப்பாடலில் உடல் சீதைக்கும் உயிர் இராமனுக்கும் உவமை
ஆயினவாறு காண்க.

     இராமனை உயிராகவும் பிராட்டியை உடலாகவும் கம்பர் காட்டிய
இடங்கள் முன்னும் உண்டு, பின்னரும் உண்டு. பாலகாண்டம் கடிமணப்
படலத்தில் இராமன் சீதையுடன் திருமண வேள்வித் தீயினை வலம் வரும்
இடத்தில்

     மடம்படு சிந்தையள், மாறு பிறப்பின்
     உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள் (1249)

    உயிரைப் பின்தொடரும் உடல் போல இராமனைப் பின் தொடர்ந்தாள்
சீதை என்பார் கம்பர். யுத்த காண்டத்து மீட்சிப் படலத்தில் அசோக
வனத்திலிருந்து இராமபிரான் இருந்த இடத்துக்குச் சீதைப் பிராட்டி வந்ததை
விளக்கும் இடத்திலும் இந்த உயிர் - உடல் ஒப்புமை வருகிறது. 'பிரிந்து
போன உயிரைக் காண நேரிட்டால் உடல் எப்படி ஆர்வத்துடன்
அவ்வுயிரைக் கவ்வுமோ அது போன்ற உணர்வினைச் சீதையின் முகம்
காட்டிற்றாம்.

     போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
    தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
    ஆனனம் காட்டுற.....(10009)

    இருவரும் முதலில் சேர்ந்த இடம், இடையில் அவ்விருவரும் பிரிந்த
இடம், இறுதியில் இருவரும் மீண்டும் சந்தித்த இடம் - ஆகிய மூன்று
இடங்களிலும் இராமனை உயிராகவும் சீதையை உடலாகவும் உவமை
கொண்ட பாங்கு சிந்தனைக்கு உரியது. கரன்வதைப் படலத்திலும் (3061)
இவ் ஒப்புமை காணலாம். சுரிகுழல் - வினைத்தொகை. காணான் -
முற்றெச்சம்.                                                 71