3474. | கைத்த சிந்தையன், கனங்குழை அணங்கினைக் காணான்- உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான்; உதவ வைத்த மா நிதி, மண்ணொடும் மறைந்தன, வாங்கிப் பொய்த்துளோர் கொள, திகைத்து நின்றானையும் போன்றான். |
கனங்குழை அணங்கினைக் காணான் - சிறந்த குழையை அணிந்த தெய்வத் தன்மை பொருந்திய பெண்ணாகிய சீதையைக் காணாமல்; கைத்த சிந்தையன் - (உயிர் வாழ்வதை) வெறுத்த மனம் உடையவனாகிய இராமன்; உதவ - (தனக்கு) உதவ; வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் - வைத்து வாழ்வதற்கு ஒரு பொருளும் இல்லாதவன் போலவும்; உய்த்து - வாழ்வதற்காகக் கொண்டு சென்று; மண்ணொடும் மறைந்தன - மண்ணில் புதைத்து மறைத்து; வைத்த மாநிதி - வைத்த பெரும் செல்வத்தை; பொய்த்துளோர் வாங்கிக் கொள - வஞ்சனை உடையவர்கள் தோண்டி (எடுத்துக்) கொள்ள; திகைத்து நின்றானையும் போன்றான் - (வாழ வழி இல்லாமல்) திகைப்பு அடைந்து நின்றவனையும் ஒத்தான். தான் பிற்காலத்தில் வல்லாங்கு வாழ எண்ணிச் செல்வத்தைப் பூமியில் புதைத்து வைத்தவன், அதனை வஞ்சனையாளர் தோண்டி எடுத்துக் கொண்டமை கண்டு வருந்தித் திகைத்து நிற்பது போல் சீதையைக் காணாது இராமன் வருந்தித் திகைத்து நின்றனன் என்க. கைத்த - வெறுத்த. 'வாங்கி - தோண்டி. பொய்த்துளோர் - கள்வர் எனினுமாம். மாநிதி - உரிச்சொல் தொடர், மண்ணொடும் மறைந்தன - மண்பாண்டத்தில் இட்டு மண்ணில் புதைத்து வைத்தனவாகிய செல்வங்கள்; இப்புதையலைக் கொள்பவர்கள் பாத்திரத்துடன் எடுத்துச் செல்வர். அது போலவே சீதையைக் கவர்ந்த இராவணன் பன்ன சாலையோடு பெயர்த்து அவளை எடுத்துச் சென்றான். இராவணன் பெயர்த்ததைக் கூறும் பாடலையும் (3390) இப்பாடலையும் இணைத்துப் பார்த்தால், மண் - இராவணன் பெயர்த்த மண் எனவும், பாத்திரத்தில் உள்ள செல்வம் - பெயர்த்த மண்ணின் மேல் இருந்த பர்ண சாலையில் தங்கிய சீதை எனவும், பர்ணசாலை - மண் பாத்திரம் எனவும் பொருந்தி வருதல் எண்ணுக. 72 |