3475. மண் சுழன்றது; மால்
     வரை சுழன்றது; மதியோர்
எண் சுழன்றது; சுழன்ற,
     அவ் எறி கடல் ஏழும்;
விண் சுழன்றது; வேதமும்
     சுழன்றது; விரிஞ்சன்
கண் சுழன்றது; சுழன்றது,
     கதிரொடு மதியும்.

    மண்சுழன்றது - நிலம் சுழன்றது; மால் வரை சுழன்றது - பெரிய
மலைகள் சுழன்றன; மதியோர் எண்சுழன்றது - ஞானிகள் உடைய
எண்ணமும் திரிந்து சுழன்றது; அவ் எறி கடல் ஏழும் சுழன்ற - அந்த
அலை எறியும் கடல்கள் ஏழும் சுழன்றன; விண்சுழன்றது - வானமும்
சுழன்றது; வேதமும் சுழன்றது - குலையா வேதங்களும் குலைந்து
சுழன்றன; விரிஞ்சன் கண் சுழன்றது - பிரமனுடைய கண்களும் சுழன்றன;
கதிரொடு மதியும் சுழன்றது - சூரியனும் சந்திரனும் நிலை குலைந்து
சுழன்றன.

     இப்பாடல் அந்தர்யாமித்தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.
கம்பர் மூல நூலில் இல்லாத இரணியன் வதைப் படலத்தை தம் நூலில்
அமைந்தமைக்குக் காரணம், கலந்தும் கரைந்தும் உள்ள பரம் பொருளின்
அந்தர் யாமித் தத்துவத்தை விளக்கவே என்பர். அப்படலத்தின் உள்ள

     தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை-
    தன்னுளே நின்று தான் அவற்றுள் தங்குவான் (6247)

     சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற தூணினும்
உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை காணுதி, விரைவின்
என்றான்; 'நன்று' எனக் கனகன் சொன்னான். (6312) என்ற பாடல்
கருத்தையும் உள்ளடங்கிய நிலையில் இப்பாடல் அமைந்துள்ள தன்மையை
எண்ணுக.                                                    73