3476.'அறத்தைச் சீறும்கொல்? அருளையே
     சீறும்கொல்? அமரர்
திறத்தைச் சீறும்கொல்? முனிவரைச்
     சீறும் கொல்? தீயோர்
மறத்தைச் சீறும்கொல்? "என்கொலோ
     முடிவு?" என்று, மறையின்
திறத்தைச் சீறும்கொல்
     நெடுந்தகையோன்?' என, நடுங்கா,

    நெடுந்தகையோன் - பெருமைப் பண்புகள் உள்ளவனாகிய இராமன்;
அறத்தைச் சீறும்கொல் - அறத்தைச் சீறுவானோ?; அருளையே சீறும்
கொல் -
கருணைப் பண்பையே சீறுவானோ?; அமரர் திறத்தைச் சீறும்
கொல் -
தேவர்களின் தன்மையைச் சீறுவானோ?; முனிவரைச் சீறும்
கொல் -
முனிவர்களைச் சீறுவானோ?; தீயோர் மறத்தைச் சீறும் கொல் -
தீய அரக்கர்களின் கொடுமையைச் சீறுவானோ?; மறையின் திறத்தைச்
சீறும் கொல் என்று -
வேதங்களின் தன்மையைச் சீறுவானோ? என்று
எண்ணி; என்கொலோ முடிவு என நடுங்கா - (அவன் சினத்தின் முடிவு)
என்ன முடிவு ஆகுமோ என்று நடுங்கி, (அடுத்த பாடலில் தொடரும்).

     அறங்காக்க வந்த தனக்கு உதவாத அறம் முதலிய அறச்சார்புப்
பொருள்களையும் அதற்கு எதிரிடையான மறச் சார்புப் பொருளையும்
இராமன் சீறுவானோ என்றபடி, திறம் - தன்மை. கொல் - ஐயப்பொருள்
தருவதோர் இடைச் சொல்.                                     74