தேர்த் தடம் பற்றி இராமன் தேடிச் செல்லுதல்

3478.'தேரின் ஆழியும் தெரிந்தனம்;
     தீண்டுதல் அஞ்சிப்
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும்
     பார்த்தனம்; பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பது,
     உரன் இலாதவர் போல்;
தூரம் போதல்முன் தொடர்தும்'
     என்று, இளையவன் தொழலும்,

    தேரின் ஆழியும் தெரிந்தனம் - தேரினது சக்கரங்கள் கண்டோம்;
தீண்டுதல் அஞ்சி - சீதையைத் தொடுவதற்கு அஞ்சிப்; பாரினோடு
கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் -
நிலத்தோடு பெயர்த்துக் கொண்டு
சென்றுள்ளதையும் பார்த்தோம்; ஈது என் என்பது - இது எவ்வாறு
நடந்தது என்று கருதுவது?; உரன் இலாதவர் போல் - வலிமை
இல்லாதவர் போல; ஓரும் தன்மை பயன் இன்று - எண்ணிக்
கொண்டிருப்பதால் பயன் எதுவும் இல்லை; தூரம் போதல் முன்
தொடர்தும் -
(நிலத்தொடு கொண்டு போனவன்) நீண்ட தூரம் போவதற்கு
முன்பே (அவனைப்பின்) தொடர்வோம்; என்று இளையவன் தொழலும் -
என்று கூறி இளையவனாகிய இலக்குவன் வணங்கிய அளவில், (அடுத்த
பாடலில் தொடரும்.)

     தேரின் சுவடுகளையும், நிலத்தொடு கொண்டு போனதையும்
கண்டோம். எனவே, இது யாரால் எவ்வாறு நடந்தது என்று வலிமை
இல்லாதவர்போல் எண்ணிக் கொண்டிருப்பதை விட அவனைத் தொடர்ந்து
போதலே தக்கது என்று இலக்குவன் கூறி வணங்கினான். ஆழி - சக்கரம்.
உரன் - வலிமை. தெரிந்தனம் - தன்மைப் பன்மை வினைமுற்று.       76