3479.'ஆம்; அதே இனி அமைவது' என்று,
     அமலனும், மெய்யில்
தாம வார்கணைப் புட்டிலும்
     முதலிய தாங்கி,
வாம மால் வரை மரன்
     இவை மடிதர, வயவர்,
பூமிமேல் அவன் தேர் சென்ற
     நெடுநெறி போனார்.

    அமலனும் - குற்றம் அற்றவன் ஆகிய இராமனும்; 'ஆம் அதே
இனி அமைவது' என்று -
ஆம் அச் செயலே இனிச் செயத்தக்கது என்று
கூறி; வயவர் - வீரர்களாகிய இராமலக்குவர்; தாமவார் கணைப்புட்டிலும்
முதலிய மெய்யில் தாங்கி -
மாலை போல் அமைந்த நீண்ட அம்பு
அறாத்தூணி முதலிய (படைக்கலங்களை) உடம்பில் தரித்துக் கொண்டு;
வாம மால் வரை - அழகுள்ள பெரிய மலைகள் (மற்றும்); மரன் இவை
மடிதர -
மரங்கள் ஆகிய இவை அழியும் படி; பூமிமேல் அவன் தேர்
சென்ற நெடுநெறி போனார் -
பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற
நீண்ட வழியில் சென்றார்கள்.

     அமலன், 'இனிச் செயத்தக்கது நீ கூறிய வாறே' என ஏற்றுக்
கொண்டான். உடனே இருவரும் படைக்கலந்தாங்கி இராவணன் தேர் சென்ற
வழியில் சென்றனர். தாமம் - மாலை போன்ற வடிவுடைய. வார் - நீண்ட.
புட்டில் - அம்பு அறாத்தூணி. வாமம் - அழகு. வயவர் - வீரர். மரன் -
கடைப்போலி.                                                77