3480. மண்ணின் மேல் அவன் தேர்
     சென்ற சுவடு எலாம் மாய்ந்து,
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை;
     மெய் உற வெந்த
புண்ணினூடு உறு வேல் என,
     மனம் மிகப் புழுங்கி,
எண்ணி, 'நாம் இனிச் செய்வது
     என்? இளவலே!' என்றான்.

    அவன் தேர் - சீதையை எடுத்துச் சென்றவனுடைய, தேரின் சக்கரப்
பதிவுகள்; மண்ணின் மேல் சென்ற சுவடு எலாம் மாய்ந்து - மண்ணின்
மேல் சென்ற அடையாளம் எல்லாம் மறைந்து; ஒரு நிலை - ஓர் இடத்தில்;
விண்ணின் ஓங்கியது - அத்தேர் வானத்தில் உயர்ந்ததாகத் தெரிந்தது;
(அது கண்ட இராமன்); மெய் உற வெந்த புண்ணினூடு உறுவேல் என -
முழுதுமாய் வெந்த புண்ணுக்கு இடையில் நுழைந்த வேல் போல; மனம்
மிகப் புழுங்கி -
மனத்தால் மிகுதியாகத் தவித்து; இளவலே -
இளையவனே; இனி நாம் எண்ணி என் செய்வது - இனிமேல் நாம்
எண்ணிப் பார்த்து என்ன செய்வது; என்றான் - (என்று இலக்குவனிடம்)
கூறினான்.

     சீதையை எடுத்துச் சென்றவனுடைய தேர்ச்சக்கரப் பதிவுகள்
ஓரிடத்தில் மறைந்து தேர் வானத்தை நோக்கி மேலெழுந்து போவது போல்
போயிருந்த நிலை கண்ட இராமன், புண்ணில் வேல் நுழைந்தது போல்
மனம் வருந்தி இலக்குவனைப் பார்த்து 'இனிச் செயத்தக்கது என்' என்றான்.
                                              78