3481. | 'தெற்குநோக்கியது எனும் பொருள் தெரிந்தது, அத்திண்தேர்; மற்கு நோக்கிய திரள்புயத்து அண்ணலே! வானம், விற்கு நோக்கிய பகழியின் நெடுது அன்று; விம்மி, நிற்கும் நோக்கு இது என் பயத்தது?' என, இளையவன் நேர்ந்தான். |
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே - (இராமன் சொன்னதைக் கேட்ட இலக்குவன்) மற்போருக்கு எதிர் நோக்குமளவு திரண்ட தோள்களை உடைய பெருமையில் சிறந்தவனே; அத்திண்தேர் தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது - அந்த வலிய தேர் தென் திசையை நோக்கிச் சென்றுள்ளது என்ற உண்மை தெரிந்து விட்டது; விற்கு நோக்கிய பகழியின் வானம் நெடிது அன்று - வில்லில் இருந்து புறப்படும் அம்புக்கு வானம் நீண்டது அல்ல; விம்மி நிற்கும் நோக்கு இது - கலங்கி நின்று எண்ணும் இச் செயல்; என்பயத்தது - என்ன பயனைத் தரும்; என இளையவன் நேர்ந்தான் - என்று இலக்குவன் (இராமன் "நாம் இனிச் செய்வது என்?" இளவலே - 3480) என்று கேட்டதற்கு விடை கூறினான். 'போரெனில் புகலும் மற்புயத்து அண்ணலே, இத்தேர் தென் திசை நோக்கிச் சென்றுளது என்பது தெரிகிறது. அது சென்ற வானம் வில்லில் இருந்து வெளிப்படும் அம்புக்கு நீண்டது அல்ல. எனவே கலங்கித் தடுமாறி நிற்பதால் என்ன பயன் என்று இலக்குவன் இராமனிடம் கூறினான். பொருள் - உண்மை, மற்கு - மற்போருக்கு. 79 |