வீணைக்கொடி கண்டு போர் நடந்தமை அறிதல் 3482. | 'ஆகும்; அன்னதே கருமம்' என்று, அத்திசை நோக்கி ஏகி, யோசனை இரண்டு சென்றார்; இடை எதிர்ந்தார், மாக மால் வரை கால் பொர மறிந்தது மான, பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல். |
ஆகும் அன்னதே கருமம் என்று - ஆம் அதுவே செய்யத்தக்க செயல் என்று (இராமன் கூறி); அத்திசை நோக்கி ஏகி - (இருவரும்) அந்தத் தென்திசையை நோக்கிச் சென்று; இரண்டு யோசனை சென்றார் - இரண்டு யோசனை தூரம் சென்றார்கள்; இடை - அந்த இடத்தில்; மாக மால் வரை கால் பொர மறிந்தது மான - பெரிய மயக்கம் தருகிற மலை ஒன்று பெருங் காற்று வீசுதலால் (நிலத்தில்) விழுந்து கிடந்தது போல்; பாக வீணையின் கொடி ஒன்று பார்மேல் கிடந்தது - துணிபட்ட வீணை வடிவம் எழுதிய கொடி ஒன்று நிலத்தின் மேல் கிடந்ததை'; எதிர்ந்தார் - கண்டார்கள். இலக்குவன் கூறியதை இராமன் ஏற்றுக் கொள்ள, இருவரும் சீதையை எடுத்துச் சென்ற பகைவனைத் தேடித் தென் திசையில் இரண்டு யோசனை தூரம் சென்றார்கள். செல்லும் வழியில் காற்றால் பெருமலை ஒன்று விழுந்து கிடப்பதைப் போல் விழுந்து கிடந்த துண்டான வீணை வடிவம் எழுதப்பட்ட கொடி ஒன்றைக் கண்டார்கள். மாகம் - பெரிய மால் - மயக்கம், கால் - காற்று, பாக வீணையின் கொடி - துண்டுபட்ட வீணை வடிவம் எழுதிய கொடி, மான - உவம உருபு. 80 |