3483. கண்டு, 'கண்டகரோடும், அக்
     காரிகை பொருட்டால்,
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர்
     விளைந்தது?' என்று அயிர்த்தார்;
துண்டவாளினின் சுடர்க் கொடி
     துணிந்தது என்று உணரா,
புண்டரீகக் கண் புனல்வர,
     புரவலன் புகல்வான்:

    கண்டு - (அக் கொடியைப்) பார்த்து; அக்காரிகை பொருட்டால் -
அந்த அழகு நீர்மை உடைய சீதையின் பொருட்டு; கண்டகரோடும் -
(கவர்ந்து சென்ற) கொடியவர்களோடு; அண்டர் ஆதியர்க்கு - தேவர்கள்
முதலானவர்களுக்கு; ஆர் அமர் விளைந்தது - கொடிய போர் நடந்தது
போலும்; என்று அயிர்த்தார் - என்று ஐயங் கொண்டார்கள்; புரவலன் -
இராமன்; துண்ட வாளினின் - (சடாயுவின்) அலகாகிய வாளினால்;
சுடர்கொடி துணிந்தது என்று உணரா - ஒளியுடைய இக் கொடி
துண்டுப்பட்டது என்று உணர்ந்து; புண்டரீகக் கண் புனல் வர - தன்
தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் ஒழுக; புகல்வான் - கூறத்
தொடங்கினான்.

     அக்கொடியைக் கண்டு சீதை காரணமாகத் தேவர்களுக்கும் கவர்ந்து
சென்ற பகைவர்களுக்கும் இடையில் போர் நடந்ததோ என்று முதலில்
ஐயங் கொண்டு, பிறகு சடாயுவினது அலகினால் அக் கொடி துண்டானதை
உணர்ந்து தன் தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் பெருக இராமன்
கூறத் தொடங்கினான். கண்டகர் - பகைவர். காரிகை - அழகு. துண்டம் -
அலகு. புண்டரீகம் - செந்தாமரை. துண்டவாளினின் - உருவகம். உணரா -
செய்யா எனும் வாய் பாட்டுடன் பாட்டு வினையெச்சம். புண்டரீகக்கண் -
உவமைத்தொகை. கண்டகர் - முள் போன்றவர் என்றலும் உண்டு.       81