3484.'நோக்கினால், ஐய! நொய்து
     இவண் எய்திய நுந்தை
மூக்கினால் இது முறிந்தமை
     முடிந்ததால்; மொய்ம்பின்
தாக்கினான்; நடு அடுத்தது
     தெரிகிலம்; தமியன்;
யாக்கை தேம்பிடும்; எண் அரும்
     பருவங்கள் இறந்தான்;

    ஐய - இளவலே; நோக்கினால் - எண்ணிப் பார்த்தால்; நொய்து
இவண் எய்திய -
விரைவாக இங்கு வந்து சேர்ந்த; நுந்தை - நின்
தந்தையான (சடாயுவினது); மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் -
மூக்கினால் இக்கொடி முறிந்திருக்க வேண்டும் என்பது முடிவாகத்
தெரிகிறது; மொய்ம்பின் தாக்கினான் - மிக வலிமையாகத் தாக்கி இருக்க
வேண்டும்; நடு அடுத்தது தெரிகிலம் - (அவருக்கு) நடுவில் நேர்ந்தது
என்ன என்று அறியக் கூடவில்லை; தமியன் - (அவரோ) தனித்தவர்
(துணையென யாருமில்லை); யாக்கை தேம்பிடும் - உடல் வலி மிக
மெலிந்திடும்; எண் அரும் பருவங்கள் இறந்தான் - கணக்கிட
அருமையான நீண்ட காலம் (வாழ்ந்து) கழித்தவர்.

     'ஐய, இவ்வீணைக் கொடி முறிந்திருக்கும் தன்மையை நோக்கினால்
இது சடாயுவினது அலகால் முறிந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அவர் நீண்ட காலம் வாழ்ந்து உடல் மிக மெலிந்த நிலையிலும் மிக
வலிமையாகத் தாக்கியிருப்பார் போலும்; இடையில் அவருக்கு என்ன
நேர்ந்ததோ தெரிகிலம்' என இலக்குவனிடம் இராமன் கூறினான். நொய்து -
விரைவாக, எளிமையாக எனினுமாம். "நொய்தின் நொய்ய சொல்
நூற்கலுற்றேன்" (பாயிரம் 5) என வருதலைக் காண்க. மொய்ம்பு - வலிமை,
நடு அடுத்தது - நடுவில் நேர்ந்தது, தேம்புதல் - உடலோ மனமோ தளர்ந்து
வருந்தல்.

     தெரிகிலம் - தன்மைப் பன்மை வினைமுற்று. யாக்கை -
தொழிலாகுபெயர்.                                              82