3485. | 'நன்று சாலவும்; நடுக்க அரும் மிடுக்கினன்; நாமும், சென்று கூடல் ஆம்; பொழுது எலாம் தடுப்பது திடனால்; வென்று மீட்கினும் மீட்குமால்; வேறுற எண்ணி, நின்று தாழ்த்து ஒரு பயன் இலை' என்றலும், நெடியோன், |
சாலவும் நன்று - (இது) மிகவும் நன்மையாயிற்று; நடுக்க அரும் மிடுக்கினன் - (மற்றவரால்) அசைக்க முடியாத வலிமை உடையவனான (அந்தச் சடாயு); பொழுது எலாம் தடுப்பது திடனால் - (பகைவனை) இன்றைப் பொழுது முழுவதும் தடுத்து நிறுத்துவது திண்ணம்; நாமும் சென்று கூடல் ஆம் - (அதற்குள்) நாமும் (அங்கு சென்று) அவரோடு சேரலாம்; வென்று மீட்கினும் மீட்குமால் - (அதற்குள் அவர் தானே) வெற்றி பெற்றுச் (சீதையை) மீட்டாலும் மீட்டு விடுவார்; வேறுற எண்ணி நின்று தாழ்த்து ஒரு பயன் இலை - வேறு விதமாகப் பலவற்றை எண்ணி்க் கொண்டு இங்கு நின்று காலம் தாழ்த்துவதால் ஒரு பயனும் இல்லை; என்றலும் - என்று (இலக்குவன்) கூறிய உடன்; நெடியோன் - உலகளந்தவனாகிய இராமன், (அடுத்த பாடலில் தொடரும்). நடுக்கறு வலி படைத்த சடாயு எதிர்த்துப் போர் செய்திருந்தால், அது மிக நல்லது. அவர் பகைவரை இன்றையப் பொழுது முழுவதும் எதிர்த்துப் போரிடுவார். அதற்குள் நாம் அங்கு அவருக்குத் துணையாகச் சென்று சேரலாம். அதற்குள் அவரே ஒரு வேளை எதிரிகளை வென்று சீதையை மீட்டாலும் மீட்டு விடுவார். பலவாறு எண்ணிக் காலம் தாழ்த்துவதால் ஒரு பயனுமில்லை என்று இலக்குவன் இராமனிடம் கூறினான். சால - மிகுதி. மிடுக்கு - வலிமை. திடன் - திண்ணம். சால - உரிச்சொல்; ஆல் - இரண்டும் அசை. 83 |