வில், சூலம், புட்டில் முதலியன வீழ்ந்து கிடப்பன காணல் 3486. | 'தொடர்வதே நலம் ஆம்' என, படிமிசைச் சுற்றிப் படரும் கால் என, கறங்கு என, செல்லுவார் பார்த்தார்; மிடல் கொள் வெஞ் சிலை, விண் இடு வில் முறிந்தென்ன, கடலின்மாடு உயர் திரை என, கிடந்தது கண்டார். |
தொடர்வதே நலம் ஆம் என - அவ்வாறு தொடர்ந்து செல்வதே நல்லது என்று கூற; படிமிசைச் சுற்றிப் படரும் கால் என - நிலத்தில் சுற்றி (விரைந்து) செல்லுகின்ற காற்றைப் போலவும்; கறங்கு என - காற்றாடி போலவும்; செல்லுவார் - விரைந்து செல்லுகின்ற (இராமலக்குவர்); பார்த்தார் - அங்கங்கே தேடிப் பார்ப்பவராகி (நடந்த போது); விண் இடு வில் முறிந்தென்ன - வானத்தில் தோன்றுகிற இந்திரவில் முறிந்து விழுந்திருப்பது போலவும்; கடலின் மாடு உயர்திரை என - கடலின் பக்கத்தில் ஓங்கி எழுகின்ற அலை போலவும்; மிடல் கொள் வெஞ்சிலை - (விளங்குகிற முறிந்து கிடந்த) வலிமை பொருந்திய கொடிய வில் ஒன்று; கிடந்தது கண்டார் - கிடந்ததைக் கண்டார்கள். இராமன் அவ்வாறு செல்வதே நலம் என்று ஏற்றுக்கொள்ள, இருவரும் அங்கங்கே தேடிச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு காற்றுப் போலவும் காற்றாடி போலவும் சென்று கொண்டிருந்தபொழுது இந்திரவில் முறிந்து கிடப்பது போலவும், கடலில் ஓங்கி எழுகின்ற அலை போலவும் முறிந்து கிடந்த வலிமை உள்ள வில் ஒன்றைக் கண்டார்கள். படி - நிலம், கால் - காற்று கறங்கு - காற்றாடி, மாடு - பக்கம்; கால் மாடு தலைமாடு என்ற பேச்சு வழக்கை எண்ணுக. இராமலக்குவர் பல்வேறு இடங்களிலும் சுற்றித் துருவித் துருவிப் பார்த்துக் கொண்டு செல்வதால் அவர்களுக்குக் காற்றும் கறங்கும் உவமையாயின. தேடிச் சென்றவர் இருவர் ஆகையால் இரண்டு உவமை அமைந்தது எனலுமாம். இராவணனது முறிந்து கிடந்த வில்லுக்கும் இரண்டு உவமைகள் வந்துள்ளமை காண்க. விண்ணிடு வில் முறிதல் அவனது வில் முறிந்து கிடத்தலுக்கும், கடலின் மாடு உயர் திரை என்பது கடல் மட்டத்திற்கு மேல் உயர்ந்து வரும் அலைகள் போல நில மட்டத்தில் இருந்து அவ்வில் உயர்ந்து கிடந்தது என்பதையும் காட்டவே கம்பர் இவ்வுவமைகளை இரண்டாக அமைத்துள்ளார் என்க. 84 |