3487.'சிலை கிடந்ததால், இலக்குவ!
     தேவர் நீர் கடைந்த
மலை கிடந்தென வலியது;
     வடிவினால் மதியின்
கலை கிடந்தன்ன காட்சியது;
     இது கடித்து ஒடித்தான்;
நிலை கிடந்தவா நோக்கு' என,
     நோக்கினன் நின்றான்.

    இலக்குவ - இலக்குவனே; சிலை கிடந்ததால் - (இங்கே ஒரு) வில்
கிடக்கின்றது; தேவர் நீர் கடைந்த மலை கிடந்தென வலியது -
(அவ்வில்) தேவர்கள் பாற்கடலைக் கடையப் (பயன்படுத்திய) மந்தர மலை
நிலத்தில் கிடப்பது போல வலிமை உடையது; வடிவினால் மதியின் கலை
கிடந்தன்ன காட்சியது -
வடிவத்தால் பிறைச் சந்திரன் போன்ற காட்சி
அமைப்புக் கொண்டது; இது கடித்து ஒடித்தான் - இவ்வில்லை தன்
மூக்கால் கொத்தி ஒடித்திட்டவன் ஆகிய (சடாயுவினது); நிலை கிடந்தவா
நோக்கு என -
வலிமை இருந்த தன்மையைப் பார் என்று; நோக்கினன்
நின்றான் -
(இராமன் அவனது தன்மைகளைப் பற்றி) எண்ணிக் கொண்டு
நின்றான்.

     தொடர்வதே நலம் எனத் தொடர்ந்து சென்ற இராமலக்குவர், வழியில்
மந்தர மலையைப் போலவும், பிறைச் சந்திரனைப் போலவும் காணப்பட்ட
வில் ஒன்று கிடந்ததைக் கண்டனர். அதைக் கண்ட இராமன் அவ்வில்லை
ஒடித்திட்டவனாகிய சடாயுவினது வலிமையைப் பற்றி எண்ணிக் கொண்டு
நின்றான். மலை - மந்தரம். வில்லின் வலிமைக்கு மந்தர மலையும்
வடிவத்துக்குப் பிறைச் சந்திரனும் உவமை என்க. நீர் - கடலுக்கு
ஆகுபெயர். இங்கு இலக்கணையால் பாற்கடலைக் குறித்தது.            85