3488. | நின்று, பின்னரும் நெடு நெறி கடந்து, உற நிமிரச் சென்று நோக்கினர்; திரி சிகைக் கொடு நெடுஞ் சூலம் ஒன்று, பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார். |
நின்று - (அவ்வாறு எண்ணிக் கொண்டு) நின்று; பின்னரும் நெடுநெறி கடந்து - (அதற்குப்) பின்பு நீண்ட வழியைக் கடந்து; நிமிர உறச் சென்று - நேராக (தெற்கு திசையில்) நீண்ட தூரம் சென்று; திரி சிகைக் கொடு நெடுஞ்சூலம் ஒன்று - மூன்று தலையை உடைய கொடுமையான பெரிய சூலம் ஒன்றினையும்; பல்கணை மழை உறு புட்டிலோடு இரண்டு - பல அம்புகளின் தொகுதி நிறைந்துள்ள அம்பறாத்தூணியாகிய இரண்டினையும்; குன்று போல்வன கிடந்த கண்டு - மலைகள் போல் கிடந்தவற்றைக் கண்டு; அதிசயம் கொண்டார் நோக்கினர் - வியப்புக் கொண்டவர்களாய்ப் பார்த்தனர். நீண்ட தூரம் தெற்கே நேராகச் சென்று முத்தலைச் சூலம், அம்பு அறாத் தூணி ஆகியவை விழுந்து கிடந்ததைக் கண்டு வியப்போடு நோக்கி நின்றனர். சிகை - தலை, உச்சி. மழை - தொகுதி. அந்தாதித் தொடை காண்க. 86 |