3489. மறித்தும் சென்றனர்; வானிடை
     வயங்குற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும்
     தொக்கன எனலாம்,
நெறிக் கொள் கானகம் மறைதர,
     நிருதர்கோன் நெஞ்சின்,
பறித்து வீசிய, கவசமும்
     கிடந்தது பார்த்தார்.

    மறித்தும் சென்றனர் - மீண்டும் (தொடர்ந்து) சென்றனர்; வானிடை
வயங்குற வழங்கி -
வானத்தில் விளக்கம் உண்டாகும் படி சஞ்சரித்து;
எறிக்கும் சோதிகள் - ஒளி வீசுகிற சூரிய சந்திரர்கள்; யாவையும்
தொக்கன எனலாம் -
முதலிய எல்லாம் ஒருங்கே சேர்ந்தன என்று
சொல்லுமாறு; நெறிக் கொள் கானகம் மறைதர - செல்லும் வழி உடைய
காட்டு இடம் மறையுமாறு; நிருதர் கோன் நெஞ்சின் பறித்து வீசிய -
அரக்கர் தலைவனாகிய இராவணனின் நெஞ்சில் இருந்து (சடாயு) பறித்து
எறிந்திருந்த; கவசமும் கிடந்தது பார்த்தார் - கவசம் கிடந்ததையும்
(இராமலக்குவர் இருவரும்) கண்டார்கள்.

     மீண்டும் தொடர்ந்து சென்ற இராமலக்குவர் வானத்தில் சஞ்சரிக்கும்
சூரிய சந்திரரும் பிற கோள்களும் ஒளியுடன் நிலத்தில் விழுந்தது போல
விழுந்து கிடந்த இராவணனது மார்புக் கவசத்தைக் கண்டனர். மறித்தும் -
மீண்டும். வயங்குற - விளக்கமாக                               87