3490.கான் கிடந்தது மறைதர,
     கால் வயக் கலிமாத்
தான் கிடந்துழிச் சாரதி
     கிடந்துழிச் சார்ந்தார்;
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும்
     கிடந்துளது; உலகின்
வான் கிடந்தது போல்வது
     கிடந்துழி வந்தார்.

    கான் கிடந்தது மறைதர - காடு உள்ள இடம் முழுவதும்
மறையும்படி; கால் வயக் கலிமாத் தான் கிடந்துழி - காற்றுப் போல்
விரைந்து செல்லும் வலிமை படைத்த கடிவாளத்தைப் பூண்ட குதிரைகள்
விழுந்து கிடந்த இடத்தையும்; சாரதி கிடந்துழிச் சார்ந்தார் - சாரதி
விழுந்து கிடந்த இடத்தையும் சென்று அடைந்தார்கள்; ஊன் கிடந்து ஒளிர்
உதிரமும் கிடந்துளது -
அந்த இடத்தில் தசையோடு பொருந்தி
விளங்குகிற குருதி சிந்திக் கிடந்தது; உலகின் வான் கிடந்தது போல்வது
கிடந்துழி -
நில உலகில் (சூரிய சந்திரரும் நட்சத்திரங்களும் உடைய)
வானம் கிடந்தது போல் (இராவணனது ஒளியுடை அணிகலன்கள் பல
கிடந்த இடத்திற்கு; வந்தார் - வந்தனர்.

     தொடர்ந்து சென்ற இராமலக்குவர் குதிரைகள் விழுந்து கிடந்ததையும்,
தேர்ப் பாகன் இறந்து கிடந்ததையும், ஒளியுள்ள பல அணிகலன்கள் சிந்திக்
கிடந்ததையும் கண்டனர். கால் - காற்று, வயக்கலிமா - வலிமை படைத்த
கடிவாளத்தை உடைய விலங்கு.                                 88