3491. | கண்டு, அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர்-கவின் ஆர் விண்தலம் துறந்து, இறுதியின் விரி கதிர் வெய்யோன் மண்டலம் பல மண்ணிடைக் கிடந்தென, மணியின் குண்டலம் பல, குலமணிப் பூண்களின் குவியல் |
இறுதியின் - உலக இறுதிக் காலத்தில்; விரிகதிர் வெய்யோன் மண்டலம் பல - ஒளி வீசுகிற சூரிய மண்டலங்கள் பல; கவின்ஆர் விண்தலம் துறந்து - அழகுடைய வானத்தின் இடத்தை விட்டு நீங்கி; மண்ணிடைக் கிடந்தென - நிலத்தில் கிடந்தது போல; மணியின் குண்டலம் பல - மணிகள் பதிக்கப் பெற்ற பல குண்டங்களும்; குலமணிப் பூண்களின் குவியல் - மிகுதியாக மணிகள் பதிக்கப் பெற்ற அணிகலன்களின் மிகுதியையும்; கண்டு - இராமலக்குவர் பார்த்து; அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் - அசையும் தன்மை உள்ள தங்கள் கைகள் (வியப்பினால் தோன்றி அச்சத்தால்) நடுங்க நின்றார்கள். உலக ஊழிக் காலத்தில் ஒளி விளங்குகிற சூரிய மண்டலம் தனக்கு உரிய இடமாகிய வானத்தை விட்டு நீங்கி நிலத்தில் கிடப்பது போல், மணிகள் பதிக்கப் பெற்ற குண்டலங்களும் அணிகலன்களும் மிகுதியாகக் கிடப்பவை கண்டு இராமலக்குவர் மலர்க்கரம் விதிர்ப்புற்றார்கள். அலங்குதல் - அசைதல் அலங்குளைப் புரவி (புறநானூறு 2) என்ற வழக்குக் காண்க, விதிர்த்தல் - நடுங்குதல். 89 |