இராமன் 'பொருதவர் பலர்" எனல் 3492. | 'தோள் அணிக் குலம் பல உள; குண்டலத் தொகுதி வாள் இமைப்பன பல உள; மணி முடி பலவால்; நாள் அனைத்தையும் கடந்தனன், தமியன், நம் தாதை; யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர்; இளையோய்! |
இளையோய் - இளையவனே; தோள் அணிக்குலம் பல உள - தோள் வளைகளின் தொகுதி மிகுதியாகக் கிடக்கின்றன; வாள் இமைப்பன குண்டலத் தொகுதி பல உள - ஒளி விடுவனவாகிய காதணிகளின் தொகுதிகள் மிகுதியாக உள்ளன; மணிமுடி பலவால் - மணிகள் பதிக்கப் பெற்ற முடிகள் பல விழுந்து கிடக்கின்றன; நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை - நீண்ட நாட்கள் (வாழ்ந்து) கழித்தவனும், துணையற்றவனுமாகிய நமது தந்தை (சடாயு); பொருதனர் - போர் செய்தோர்; யாளி போல்பவர் பலர் உளர் - சிங்கம் போன்ற (வீரர்) பலர் உளர் போலும் (என்று இராமன் இலக்குவனை நோக்கிக் கூறினான்). தோள் வளையங்களும், காதணிகளும் மணமுடிகளும் பல சிந்தி விழுந்து கிடப்பதால் வயதான, துணையில்லாத நம் தாதையாகிய சடாயுவுடன் பொருதவர் பலர் போலும் என்று இராமன் இலக்குவனிடம் கூறினான். வாள் - ஒளி. நாள் அனைத்தையும் கடந்தனன் - மிக மிக வயதானவன், 90 |