'பொருதவன் இராவணன் ஒருவனே' என இலக்குவன் கூறல் 3493. | திருவின் நாயகன் உரைசெய, சுமித்திரை சிங்கம், 'தருவின் நீளிய தோள் பல, தலை பல, என்றால், பொருது தாதையை இத்தனை நெறிக் கொடு போனான் ஒருவனே, அவன் இராவணன் ஆம்' என உரைத்தான். |
திருவின் நாயகன் உரை செய - திருமகள் கேள்வனாகிய இராமன் (இவ்வாறு) சொல்ல; சுமித்திரை சிங்கம் - சுமித்திரையின் சிங்கம் போன்ற (மகனாகிய) இலக்குவன்; தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் - மரங்கள் போல் நீண்டுள்ள தோள்கள் பல தலைகள் பல என்றால்; தாதையைப் பொருது - தந்தையாகிய சடாயுவோடு போரிட்டு; இத்தனை நெறிக்கொடு போனான் - இத்தனை நீண்ட தூர வழியில் சீதையைக் கொண்டு போனவன்; ஒருவனே - ஒருவன் ஆகவே இருக்க வேண்டும் (பலர் அல்லர் என்றபடி); அவன் இராவணன் ஆம் என - அவன் (தோள் இருபதும் தலைகள் பத்தும் கொண்ட) இராவணனாதல் கூடும் என்று; உரைத்தான் - கூறினான். இராமன் கூறியதைக் கேட்ட இலக்குவன் பல தோளணிகளும், பல மகுடங்களும் கிடப்பதால் பல தோள்களும், பல தலைகளும் உடைய இராவணன் ஒருவனே சடாயுவொடு போரிட்டுச் சீதையை இவ்வளவு நீண்ட தூரம் கவர்ந்து வந்தவனாதல் வேண்டும் என்றான். திரு - திருமகள், தரு - மரம், இராமன் சீதையைப் பிரிந்து மனக் கலக்கம் அடைந்திருந்ததால் நடந்ததை ஊகிக்க முடியவில்லை என்றும் இலக்குவன் அறிவுக் கூர்மையும் கலங்காத மனமும் உடையவனாய் இருந்ததால் இவ்வாறு சரியாக ஊகித்து உணர்ந்து கொண்டான் எனலாம். மாரீசன் பொன் மானாக வந்த போதும், அவன் இராமன் அம்புபட்டு இறக்கும் தறுவாயில் வஞ்சனை ஒலி எழுப்பிய போதும் இலக்குவன் சரியாக ஊகித்தமை அவனது நுண்ணறிவுத் திறத்தைக் காட்டும். 91 |