சடாயுவைக் கண்டு இராமன் புலம்பிச் சோர்தல் 3494. | மடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா, மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான், உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர், கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான். |
மடல் உள் நாட்டிய தார் இளையோன் - பூவிதழ்கள் உள்ளே அமையத் தொடுக்கப்பட்ட மார்பு மாலையை அணிந்த இளையவனாகிய இலக்குவன் (கூறிய); சொலைமதியா - சொற்களை மதித்து (ஏற்று); மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் - (காணும்) வலிமை அமைந்த கண்களில் சினத்தீ வெளிப்படப் பார்த்தவனாகி; விரைவான் - விரைந்து செல்லுகின்றவனாகிய இராமன்; உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர் - உடலில் இருந்து வெளிப்பட்ட இரத்தமாகிய கடலுக்கு மேல்; கடலுள் நாட்டிய மலையன்ன - கடலுள் (மத்தாக) நாட்டிய மந்தரமலையை ஒத்த; தாதையைக் கண்டான் - தந்தையாகிய சடாயுவைக் கண்டான். இலக்குவன் சொல்லை ஏற்றுச் சென்ற இராமன், கடலில் மத்தாக அமைக்கப்பட்ட மந்தரமலை போல் தன் உடம்பில் இருந்து வெளிப்பட்ட குருதிக் கடலிடைக் கிடந்த சடாயுவைக் கண்டான். மடல் - பூவிதழ்கள், தார் - மார்புமாலை. மிடல் - வலிமை, ஈண்டுப் பார்வைச் சிறப்புக்கு அடையாக வந்தது. நாட்டம் - கண், பரவை - கடல் உம்பர் - மேல், கடல் - திருப்பாற்கடல் தார் இளையோன் - இரண்டாம் வேற்றுமைத் தொகை, சொலை - இடைக்குறை. நோக்கினான் - முற்றெச்சம். 92 |