3495.துள்ளி, ஓங்கு செந் தாமரை
     நயனங்கள் சொரிய,
தள்ளி ஓங்கிய அமலன், தன்
     தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திரு மேனியில்,
     தழல் நிற வண்ணன்
வெள்ளி ஒங்கலில் அஞ்சன
     மலை என, வீழ்ந்தான்.

    ஓங்கிய அமலன் - உயர்ந்தவனும் மலமற்றவனுமாகிய இராமன்;
ஓங்கு செந்தாமரை நயனங்கள் - சிறப்பான செந்தாமரை போன்ற (தன்)
கண்கள்; துள்ளி சொரிய தள்ளி - கண்ணீரை மிகுதியாகச் சொரியுமாறு
பெருக்கிக் கொண்டு; தன் தனி உயிர்த்தந்தை - தன் சிறப்பான உயிர்
போன்ற தந்தையும்; வள்ளியோன் - வண்மைப் பண்பு மிகக்
கொண்டவனுமாகிய சடாயுவின்; திருமேனியில் - உடலின் மீது; தழல்நிற
வண்ணன் -
நெருப்பின் நிறம் போன்று சிவந்த நிறத்தை உடைய
சிவபெருமானின்; வெள்ளி ஒங்கலில் - வெள்ளி மலையின் மீது; அஞ்சன
மலை என வீழ்ந்தான் -
மையால் இயன்ற மலை வீழ்ந்தது போல
விழுந்தான்.

     குருதிக் கடலிடைத் தாதையைக் கண்ட இராமன் தன் செந்தாமரை
மலர் போன்ற கண்களில் கண்ணீர் பெருக வெள்ளி மலையின் மீது
அஞ்சன மலை விழுந்தது போலச் சடாயுவின் உடல் மீது விழுந்தனன்.
வெள்ளி மலை - சடாயுவின் உடல் நிறத்துக்கும் வடிவத்துக்கும்,
அஞ்சனமலை - இராமனின் உடல் நிறத்துக்கும் வடிவத்துக்கும் உவமை
என்க. வள்ளியோன் - வள்ளல் தன்மை உடைய சடாயு. தன் உயிரைப்
புகழ்க்கு விற்று உயிர் கொடுத்துப் புகழ் கெண்டவனாதலில் இவ்வாறு
கூறினார். துள்ளி - விரித்தல் விகாரம்.                          93