3496. உயிர்த்திலன் ஒரு நாழிகை;
     உணர்விலன்கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு, அம் கையின்
     எடுத்தனன், அருவிப்
புயல் கலந்த நீர் தெளித்தலும்,
     புணடரீகக் கண்
பெயர்த்து, பைப்பைய அயர்வு
     தீர்ந்து, இனையன பேசும்:

    ஒரு நாழிகை உயிர்த்திலன் - (இராமன் சடாயுவினது உடலின் மீது
விழுந்து) ஒரு நாழிகை அளவு மூச்சற்றவனானான்; உணர்விலன் கொல்
என்று அயிர்த்த தம்பி -
(அதுகண்டு) உணர்ச்சியற்று மயங்கினான்
போலும் என்று ஐயங்கொண்ட தம்பியாகிய இலக்குவன்; புக்கு - சென்று;
அம் கையின் எடுத்தனன் - (இராமனைத் தன்) அழகிய கைகளால்
(தழுவி) எடுத்து; புயல் அருவி கலந்த நீர் தெளித்தலும் - மேகத்தில்
இருந்து மலை அருவியாக வந்த நீரை (முகத்தில்) தெளித்த உடனே;
புண்டரீகக் கண் பெயர்த்து - தன் தாமரை போன்ற கண்களைத் திறந்து;
பைப்பைய அயர்வு தீர்ந்து - மெதுவாகச் சோர்வு நீங்கி; இனையன
பேசும் -
இச் சொற்களைக் கூறத் தொடங்கினான்.

     சடாயுவின் உடல் மீது விழுந்த இராமன் உயிர்ப்பும் உணர்வும்
அற்றவனாய் இருத்தலைக் கண்ட துணைத் தம்பியாகிய இலக்குவன்
நீரினைத் தெளித்ததனால் மெல்ல மெல்ல உணர்வைத் திரும்பப் பெற்ற
இராமன் கீழ் வரும் சொற்களைக் கூறத் தொடங்கினான் என்க. உயிர்ப்பு -
மூச்சு. அயிர்த்த - ஐயம் கொண்ட; புயல் - மேகம். பைப்பைய - மெல்ல
மெல்ல. கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச் சொல். இனையன -
குறிப்பு வினையாலணையும் பெயர்.                               94