இராமன் புலம்பல் கலிப்பா 3497. | 'தம் தாதையரைத் தனையர் கொலை நேர்ந்தார் முந்து ஆரே உள்ளார்? முடிந்தான் முனை ஒருவன்; எந்தாயே! எற்காக நீயும் இறந்தனையால்; அந்தோ! வினையேன் அருங் கூற்றம் ஆனேனே! |
தம் தாதையரை - தம் தந்தையரை; கொலை நேர்ந்தார் - கொலை செய்ய உடன்பட்டவராகிய; தனையர் - மக்கள்; முந்து ஆரே உள்ளார் - எனக்கு முன்பு எவர் உள்ளார்கள்; முனை - முன்பு; ஒருவன் - ஒப்பற்ற தந்தையாகிய தசரதன்; முடிந்தான் - என்னைப் பிரிந்ததால் உயிரிழந்தான்; எந்தாயே- என்னுடைய தந்தையாகிய சடாயுவே; எற்காக நீயும் இறந்தனை - எனக்காக நீயும் இறந்து விட்டாயோ?; வினையேன் - தீ வினை உடைய யான்; அந்தோ - ஐயோ; அருங்கூற்றம் ஆனேனே - உங்களுக்குக் கொடிய யமன் ஆனேனே என்றபடி. 'அயோத்தியில் என்னைப் பிரிந்ததால் தயரதன் இறக்கவும், இங்கு எனக்கு உதவ வந்ததால் சடாயு இறக்கவும் தீ வினை உடைய நான் காரண மானேன். இவ்வாறு தந்தையர் இறக்கக் காரணமான கொலைகார மக்கள் எனக்கு முன்பு எவர் உளர்' என்றான் இராமன். நேர்தல் - உடன் படல், முந்து - முன்பு. முனை - முன்பு எந்தாயே - விளி. ஆல் - அசை. அந்தோ - புலம்பல் குறித்த சொல். 95 |