3498.'பின் உறுவது ஓராதே
     பேதுறுவேன் பெண்பாலாள்-
தன் உறுவல் தீர்ப்பான்,
     தனி உறுவது ஓராதே,
உன் உறவு நீ தீர்த்தாய்;
     ஓர் உறவும் இல்லாதேன்
என் உறுவான் வேண்டி
     இடர் உறுவேன்? எந்தாயே!

    எந்தாயே - எனது தந்தையே; பெண்பாலாள் தன் உறுவல்
தீர்ப்பான் -
பெண்ணாகிய சீதை (மாயமானிடம் மயக்கம் கொண்டு
அடைந்த) துன்பத்தைத் தீர்ப்பதற்காக; பின் உறுவது ஓராதே பேதுறு
வேன் -
(அம்மானின் பின் சென்று அதனால்) பின்வரும் விளைவுகளைப்
பற்றி எண்ணாமல் மயக்கம் கொண்டு வருந்துபவனாகிய யான்; தனி
உறுவது ஓராதே -
ஒரு துணையும் இன்றித் தனியாக நிற்பதைப் பற்றி
எண்ணாமல் (இராவணனிடம் போரிட்டு); உன் உறவு நீ தீர்த்தாய் - உன்
உறவின் கடமையை நீ தீர்த்துக் கொண்டாய்; ஓர் உறவும் இல்லாதேன் -
எந்த வகை உறவுகளும் இல்லாத நான்; என் உறுவான் வேண்டி இடர்
உறுவேன் -
என்ன பயனை அடைய விரும்பி (இப்பொழுது) துன்பம்
அடைகிறேன்.

     பெண்பாலாள் துன்பத்தைத் தீர்ப்பதற்காக எண்ணிப் பாராமல் மாய
மானின் பின் நான் சென்றேன். ஆனால் நீயோ துணையின்றித் தனியாக
இருப்பதைப் பற்றி எண்ணாமல் உன் உறவின் கடமையைத் தீர்த்தாய்.
அவ்வாறு எதையும் செய்யாத நான் என்ன காரணத்தால் இப்பொழுது
துன்பம் அடைகிறேன் என்று இராமன் புலம்பினான் என்க. ஓராது -
எண்ணாமல் பேதுறுதல் - மயங்குதல். உறுவல் - துன்பம். பேதுறுவேன் -
முற்றெச்சம்.                                                 96