3499.'மாண்டேனே அன்றோ? மறையோர்
     குறை முடிப்பான்
பூண்டேன் விரதம்; அதனால்
     உயிர் பொறுப்பேன்;
நீண்டேன் மரம் போல, நின்று
     ஒழிந்த புன் தொழிலேன்;
வேண்டேன், இம் மா மாயப்
     புன் பிறவி வேண்டேனே!

    மாண்டேனே அன்றோ - (இத்தகு செயல்களுக்குக் காரணமான
நான்) இறந்தவனையே ஒத்தவனல்லவா? (அவ்வாறு இறக்காமல்
இருப்பதற்குக் காரணம்); மறையோர் குறை முடிப்பான் - வேதத்தில்
வல்ல முனிவர்களது குறைகளை நீக்குவதான; விரதம் பூண்டேன் -
விரதத்தைக் கைக் கொண்டுள்ளேன்; அதனால் உயிர் பொறுப்பேன் -
அதனால் உயிரை (உடலில்) கொண்டவனாகி; நீண்டேன் - வாழ் நாள்
நீட்டிக்கப் பெற்றுள்ளேன்; மரம்போல நின்று - மரம் போல வளர்ந்து
நின்று; ஒழிந்த - யாது ஒரு பயனும் இல்லாத; புன்தொழிலேன் - புல்லிய
தொழிலை உடையவனாகிய நான்; இம் மா மாயப் புன் பிறவி - இந்த
மயக்கம் நிறைந்த இழி பிறப்பை; வேண்டேன் வேண்டேனே -
விரும்பேன் விரும்பேன்.

     முனிவர் குறை தீர்க்க விரதம் பூண்டதே காரணமாக வாழ
வேண்டியிருக்கிறதே என்று தன் வாழ்வையே வெறுத்துப் பேசுகிறான்.
வேண்டேன் வேண்டேன் என்ற அடுக்கு வாழ்க்கை மீது கொண்ட
வெறுப்பைக் குறித்தது.                                         97