3500.'என் தாரம் பற்றுண்ண
     ஏன்றாயை, சான்றோயை,
கொன்றானும் நின்றான்;
     கொலையுண்டு நீ கிடந்தாய்;
வன் தாள் சிலை ஏந்தி,
     வாளிக் கடல் சுமந்து,
நின்றேனும் நின்றேன்; நெடு
     மரம்போல் நின்றேனே!

    என் தாரம் பற்றுண்ண - என் மனைவி (என்னால் பாதுகாக்கப்
படாது) மாற்றானால் பற்றப்பட; ஏன்றாயை - (அவளை மீட்பதற்காக)
எதிர்த்துப் போரிட்டவன் ஆகிய; சான்றோயை - சான்றோன் ஆகிய
உன்னை; கொன்றானும் நின்றான் - கொன்றவனாகிய பகைவனும்
உயிரோடு நின்றான்; நீ கொலையுண்டு கிடந்தாய் - நீயோ
கொலைப்பட்டுக் கிடக்கிறாய்; வன்தாள் சிலை ஏந்தி - வலிமையான
அடிப்பகுதியை உடைய வில்லினைக் (கையில்) ஏந்தி; வாளிக் கடல்
சுமந்து -
அம்புகளின் தொகுதியைச் சுமந்து கொண்டு; நின்றேனும்
நின்றேன் -
நின்றவனாகிய நானும் நின்றேன்; நெடுமரம் போல்
நின்றேனே -
ஓங்கி வளர்ந்த மரம் போல் நின்றேன் என்றவாறு.

     கொலையுண்டு நீ கிடந்தாய்' என்ற வரியில் சடாயுவின் இடம் நன்றி
உணர்வும், மதிப்புணர்வும் நெடுமரம் போல் நின்றேன் என்ற இடத்து
நாணமும், பெரு வெறுப்பும் வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது
என்பர். வாளிக்கடல் - அம்புகளின் தொகுதி; கடலளவு கணைகள் இருந்தும்
அவை பலனற்று வெறுஞ்சுமையாயின என்று வருந்துகிறான் இராமன்.    98