சடாயு உயிர்ப்புற்று உரைத்தல்

3502. அன்னா! பல பலவும்
     பன்னி அழும்; மயங்கும்;
தன் நேர் இலாதானும் தம்பியும்
     அத் தன்மையனாய்;
உன்ன, உணர்வு சிறிது உள்
     முளைப்ப, புள்ளரசும்,
இன்னா உயிர்ப்பான்,
     இருவரையும் நோக்கினான்.

    தன் நேர் இலாதானும்-தனக்கு ஒப்பு தான் தானேயன்றிப் பிறரில்லை எனும்படியானவனான இராமனும்; அன்னா - அத்தகையதான (சொற்கள்);
பலபலவும் பன்னி அழும் - பலவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி
அழுவான்; மயங்கும் - அறிவு மயக்கம் கொள்வான்; தம்பியும் -
தம்பியாகிய இலக்குவனும்; அத்தன்மையனாய் - அந்த (அழுது மயங்கும்)
நிலை உடையவனாக; புள்ளரசும் - கழுகரசன் ஆகிய சடாயுவும்; உள்
சிறிது உணர்வு முளைப்ப -
உள்ளத்தில் சிறிதளவு உணர்வு தோன்ற;
உன்னா - நினைப்பு வரப்பெற்று; இன்னா உயிர்ப்பான் - துன்பத்துடன்
மூச்சுவிடுபவனாகி; இருவரையும் நோக்கினான் - (தன்னைச் சூழ்ந்துள்ள
இராமலக்குவர்) இருவரையும் கண் திறந்து பார்த்தான்.

     தனக்குத் தானே ஒப்பானவனான இராமனும் தம்பியும் அழுது
மயங்கினர். அந்நிலையில் சடாயு சிறிது உணர்வு பெற்றுத் துன்பப்பட்டு
மூச்சு விட்டுக் கொண்டு அவ்விருவரையும் பார்த்தான். பன்னி - திரும்பத்
திரும்பச் சொல்லி, உன்னா - நினைவு பெற்று; 'இன்னா - துன்பம். அன்னா
- குறிப்பு வினையாலணையும் பெயர் அன்ன என்பது எதுகை நோக்கி
நீண்டது என்பர்.                                            100