3503. | உற்றது உணராது, உயிர் உலைய வெய்துயிர்ப்பான் கொற்றவரைக் கண்டான்; தன் உள்ளம் குளிர்ப்புற்றான்; இற்ற இரு சிறகும், இன்னுயிரும், ஏழ் உலகும், பெற்றனனே ஒத்தான்; 'பெயர்த்தேன் பழி' என்றான். |
உற்றது உணராது - (தான் வெட்டுண்டு விழுந்த பின் சீதைக்கு) நேர்ந்த நிலையை அறியாமல்; உயிர் உலைய வெய்துயிர்ப்பான் - உயிர் நடுங்குமாறு பெருமூச்சு விடுபவனாகிய சடாயு; கொற்றவரைக் கண்டான் - வெற்றி வீரர்களான இராமலக்குவரைக் கண்டவனாய், (அதனால்); தன் உள்ளம் குளிர்ப்புற்றான் - தன் மனம் குளிர்ந்தான்; இற்ற இரு சிறகும் - அறுபட்டு விழுந்த தன் இரு இறகுகளையும்; இன்னுயிரும் - (தன்) இனிய உயிரையும்; ஏழுலகும் - ஏழு உலகங்களையும்; பெற்றனனே ஒத்தான் - ஒருங்கே பெற்றவன் போல (பெரு மகிழ்ச்சி அடைந்தான்); பழிபெயர்த்தேன் என்றான் - (எனக்கு ஏற்பட்ட பழியையும் அவர்களுக்கு ஏற்பட்ட) பழியையும் நீக்கி விட்டேன் என்று கூறினான். பழிபெயர்த்தேன் - தனக்கும் இராமனுக்கும் ஏற்பட்ட பழியை நீக்கி விட்டதைக் குறித்தான். சீதையை மீட்க முடியாமையும், அதை இராமனிடம் சொல்ல முடியா நிலைமையையும் சடாயு தன்பழி என்கிறான். இராமலக்குவர் இராவணன் கவர்ந்து சென்ற செய்தியைத் தன் மூலம் கேட்டு அவனை வென்று சீதையை மீட்பர் என்ற உறுதியால் அவர்களுடைய பழியையும் நீக்கி விட்டேன் என்கிறான் சடாயு. பழிக்கு நாணும் பாத்திர இயல்பு காண்க. தன்னலமின்மை. உற்றுழி உதவல், நட்பைப் பெரிதென மதித்தல், பழிக்கு நாணல் ஆகியவை சடாயுவின் பண்புகளாம். பெயர்த்தேன் -நீக்கிவிட்டேன். உற்றது - வினையாலணையும் பெயர். 101 |