3504.'பாக்கியத்தால், இன்று, என்
     பயன் இல் பழி யாக்கை
போக்குகின்றேன்; கண்ணுற்றேன்,
     புண்ணியரே! வம்மின்' என்று
தாக்கி அரக்கன் மகுடத்
     தலை தகர்த்த
மூக்கினால் உச்சி முறைமுறையே
     மோக்கின்றான்.

    புண்ணியரே - நல்வினை உடையவர்களே; பயன் இல் - பயன்
இல்லாத; பழி என் யாக்கை - பழிப்பதற்குரிய என் உடம்பை; இன்று
போக்குகின்றேன் -
இப்பொழுது விட்டு விடப் போகிறேன்; பாக்கியத்தால்
-
(நான் செய்த) புண்ணியத்தால்; கண்ணுற்றேன் - உங்களைக் காணப்
பெற்றேன்; வம்மின் என்று - வாருங்கள் என்று (அருகில் அழைத்து);
அரக்கன் மகுடத்தலை தாக்கித் தகர்த்த - அரக்கன் ஆகிய
இராவணனது மகுடத்தோடு கூடிய தலையைத் தாக்கித் தகர்த்திட்ட;
மூக்கினால் - (தன் வலிய) அலகினால்; உச்சி - (அவர்களுடைய) தலை
உச்சியை; முறை முறையே மோக்கின்றான் - மாறி மாறிப் பல முறை
மோந்திடுபவன் ஆனான்.

     பயன் இல் பழியாக்கை - சீதையை மீட்கப் பயன்படாத உடம்பு.
அரக்கன் மகுடத்தலை தகர்த்த - இராவணனுடன் போரிட்டு அவனது
கிரீடங்களைக் கீழே தள்ளியதைக் குறித்தது; அதே மூக்கு இராமலக்குவரின்
உச்சியை மோந்ததென்க. உச்சி முகர்தல் - பாசமும் அன்பும் உடையார்
செயல்.                                                    102