3505. | 'வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய நெஞ்சகமே முன்னே நினை வித்தது; ஆனாலும், அம் சொல் மயிலை அருந்ததியை, நீங்கினிரோ, எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்?' என்று உரைத்தான், |
வந்த வரவு - (இராவணன் சீதையை எடுத்து) வந்த வரவு; வஞ்சனையால் என்பது- சூழ்ச்சியால் தானிருக்கும் என்பதை; என்னுடைய நெஞ்சகமே - என்னுடைய மனந்தான்; முன்னே நினைவித்தது - முன்பே நினைக்குமாறு செய்தது; ஆனாலும் - ஆயினும்; எஞ்சல் இலா ஆற்றல் இரு வீரும் - குறைவு இல்லாத வலிமை உடைய (நீங்கள்) இருவரும்; அம்சொல் மயிலை - அழகிய பேச்சினிமை உடைய மயில் போன்ற சாயல் கொண்டவளும்; அருந்ததியை - அருந்ததி போன்ற கற்பு நிலை உள்ளவளும் ஆகிய சீதையை; நீங்கினிரோ - (பர்ண சாலையில் தனியாக விட்டுவிட்டுப்) பிரிந்து போய் விட்டீர்களோ?; என்று உரைத்தான் - என்று (சடாயு) கூறினான். 'இராவணன் சீதையைத் தூக்கி வந்தது சூழ்ச்சியால்தான் இருக்க வேண்டும் என்று என் மனம் கருதியது. எனினும், நீவிர் இருவரும் கற்பின் கொழுந்தைத் தனியே விட்டு விட்டுப் போய் வீட்டீர்களோ?' என்று சடாயு கேட்டான். நீங்கினிரோ - தந்தை என்ற உறவு முறை கருதிக் கூறிய கடுஞ் சொல் என்க. நீங்கள் சீதையைத் தனியாக விட்டு விட்டுச் சென்றது தெரிந்திருந்தால் நான் சற்று விழிப்பாக இருந்து இருப்பேன் என்பது குறிப்பு. இதனை வார்ப் பொற் கொங்கை மருகியை மக்களை ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறினன்-சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் (2731) என்ற சடாயு காண்படலப் பாடல் உறுதி செய்வதை எண்ணுக. நினைவித்தது - நினைத்தது. பிறவினை தன் வினைப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மயில், அருந்ததி - உவமை ஆகுபெயர்கள். 103 |