கலிவிருத்தம்

3506. என்று அவன் இயம்பலும்,
     இளைய கோமகன்,
ஒன்றும் ஆண்டு உறு
     பொருள் ஒழிவுறாவகை,
வன் திறல் மாய மான்
     வந்தது ஆதியா
நின்றதும், நிகழ்ந்ததும்,
     நிரப்பினான் அரோ.

    என்று அவன் இயம்பலும் - என்று அச்சடாயு கூறிய உடனே;
இளைய கோ மகன் - தசரதனின் மக்களில் இளையவனான (இலக்குவன்);
ஆண்டு உறுபொருள் ஒன்றும் ஒழிவுறா வகை - அந்த இடத்தில் நடந்த
செயல்களில் ஒன்றையும் விட்டு விடாதபடி; வன்திறல் மாயமான் வந்தது
ஆதியா -
மிக்க வலிமை உடைய மாயமான் வந்தது முதலாக; நின்றதும்
நிகழ்ந்ததும் -
நிகழ்ந்து நின்ற செயல்களை; நிரப்பினான் (அரோ) -
முழுதும் கூறி முடித்தான்.

     சடாயுவுக்கு இலக்குவன் மாய மான் வந்தது முதல் நடந்த
செயல்களை ஒன்று விடாது உரைத்தனன் என்க. அரோ - அசை. நின்றதும்
நிகழ்ந்ததும் என்பதை

     மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே
    கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி" (3305)

என்று இராமன் கூறிவிட்டுச் சென்ற படி

     "பொன் அனாள் புக்க சாலை
    காத்தனன், புறத்து நின்றே (3306)

காத்து நின்றதையும், அப்போது மாரீசனின் மாயக் குரல் கேட்டுச் சீதை
கலங்கி உயிர் ஒழியப் போனதையும், அதனால்தான்

     போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து, கேடு
    ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து
    ஏகு என்றீர்; இருக்கின்றீர் தமியிர்' என்று பின்
    வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான். (3334)

    சீதையைப் பிரிந்து செல்ல வேண்டி வந்தது என நிகழ்ந்ததையும்
கூறினான் என்று விளக்கலாம்.

     "அம்சொல் மயிலை, அருந்ததியை நீங்கினிரோ
    எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்"

என்று சடாயு கேட்ட கேள்விக்கு விடையாக இலக்குவன் கூறியது இப்பாடல்
என்க.                                                     104