சடாயு ஆறுதல் கூறுதல்

3507. ஆற்றலோன் அவ் உரை
     அறைய, ஆணையால்
ஏற்று, உணர்ந்து, எண்ணி,
     அவ் எருவை வேந்தனும்,
'மாற்ற அருந் துயர் இவர்
     மனக் கொளாவகை
தேற்றுதல் நன்று' என,
     இனைய செப்புவான்:

    ஆற்றலோன் - சொல் ஆற்றல் உடைய இலக்குவன்; ஆணையால்
-
(இராமனது) கட்டளையினால்; அவ்உரை அறைய - அந்த (வகையான)
சொற்களைச் சொல்ல; ஏற்று உணர்ந்து எண்ணி - (அவற்றைக்) கேட்டு
உணர்ந்து எண்ணிப் பார்த்து; அவ் எருவை வேந்தனும் - அந்தக் கழுகு
அரசனாகிய (சடாயுவும்); மாற்ற அருந்துயர் - நீக்க முடியாத துன்பத்தை;
இவர்மனக் கொளா வகை - இவர்கள் மனதில் கொள்ளாத படி;
தேற்றுதல் நன்று என - தேறுதல் சொல்வது நல்லது என்று எண்ணி;
இனைய செப்புவான் - இத்தகைய சொற்களைச் சொல்பவனானான்.

     ஏற்று உணர்ந்து எண்ணி - மற்றவர் கூறுவதைக் கேட்கும் முறை
விளக்கமாக வந்தது அறிக. ஆற்றலோன் - வலிமை உடையவன், அறிவு
வலிமை உடையன் எனப் பலவாறு கொள்ளலாம். முன் பாடலில்
இலக்குவனின் நிரலே சொல்லும் திறம் சுருக்கிக் கூறப்பட்டதால் இங்குச்
சொல்லாற்றல் என்று கொள்வதே சாலப் பொருத்தம் என்க.          105