3508.'அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
"துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதி வயம்" என்பதை மேற்கொளாவிடின்,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?

    ஒருவரால் அதிசயம் அமைக்கல் ஆகுமோ - ஒருவரால் (மட்டும்)
புதுமையைச் செய்ய முடியுமோ? (முடியாது என்றபடி); துதி அறு
பிறவியின் இன்ப துன்பம் தான் -
புகழ் அற்ற (மனிதப் பிறவிக்கு வருகிற)
இன்ப துன்பங்கள்தான்; விதிவயம் - ஊழ்வினைப்படி வருவன; என்பதை
மேற்கொளாவிடின் -
என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் போனால்;
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ - அறிவின் வலிமையால்
ஊழ்வினையை வெல்லுவதற்கு வல்லமை உடையோமாவோமோ? (ஆக
மாட்டோம்) என்றவாறு

     நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை
ஏற்றுக் கொண்டால் தான் நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க
முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப
துன்பங்களை வெல்ல முடியாது என்றபடி. வருவன வந்தே தீரும்,
அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதி வசம் என எண்ணி
ஆறுதல் அடைந்து மதி வலியால் அதனைப் போக்கலாம் என்று சடாயு
ஆறுதல் கூறுகிறான். 'விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி'
(1735) என்று சன்னத்தனாகிக் கொக்கரித்த இலக்குவன், வெஞ்சின
விதியினை வெல்ல வல்லமோ, (3333) என்று கூறுதல் காண்க. அதிசயம் -
புதுமை; துதி அறு பிறவி - புகழ் அற்ற பிறவி. விதி ஊழ், பால், தெய்வம்
என்பன ஒரு பொருட் சொற்கள்.                                106