3509. | 'தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற, சிந்தையை எரிவுசெய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்; பிரிவுசெய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை அரிவுசெய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ? |
தெரிவுறு துன்பம் - (விதி வசத்தால் வருகிறது என்று) தெளியப் பட்ட துன்பம்; வந்து ஊன்ற - ஒருவனிடம் வந்து சேர; சிந்தையை எரிவு செய்து - (அதற்காக அவன் தன்) மனத்தைக் கலங்க விட்டு; ஒழியும் ஈது- அழியும் இத்தன்மை; இழுதை நீரதால் - பேதமைத் தன்மையாகும்; உலகு எலாம் - உலகங்களை எல்லாம்; பிரிவு செய்து - வகுத்துப் பிரித்தலைச் செய்து; பெறுவிப்பான் - படைத்தவனாகிய (பிரமனது); தலை அரிவு செய் - தலையை அறுத்தல் செய்த; விதியினார்க்கு - ஊழ்வினைக்கு; அரிது உண்டாகுமோ - செய்தற்கு அரிய செயல் என்று (ஏதேனும்) உண்டாகுமோ (ஆகாது) விதியினால் வரும் துன்பத்துக்காக மனம் கலங்கி அழிவது பேதைமைத் தன்மையாகும். அவ்விதி பிரமனின் தலையையும் அறுத்தலைச் செய்த ஆற்றல் உடையது என்று உணர்ந்து ஆறுதல் அடைய வேண்டும் என்பது கருத்து. சிவபிரான் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிக் களைந்தான் என்பது புராணச் செய்தி. இழுதை - பேதைமை, அறியாமை, 107 |