3510. | 'அலக்கணும் இன்பமும் அணுகும் நாள், அவை விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ? இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார், தலைக் கலத்து, இரந்தது தவத்தின் பாலதோ? |
அலக்கணும் இன்பமும் - துன்பமும் இன்பமும்; அணுகும் நாள் - வரும் காலத்து; அவை - அந்த இன்ப துன்பங்களை; விலக்குவம் என்பது - (நாம் வராமல்) தடுத்து விடுவோம் என்பது; மெய்யிற்று ஆகுமோ - உண்மை உடையதாகுமா? (ஆகாது); முப்புரங்களை - முப்புரத்தை; இலக்கு எய்த - இலக்காக்கித் தொடுத்து (அழித்த); வில்லியார் - வில்லை ஏந்தியவரான சிவபெருமான்; தலைக்கலத்து இரந்தது - பிரமனது மண்டை ஓட்டில் பிச்சை எடுத்தது; தவத்தின் பாலதோ - தவச் செயலுக்கு உரியதோ? (அன்று) நமக்கு வரும் இன்ப துன்பங்களை நாம் வராமல் விலக்கி விடலாம் என்று கூறுவது உண்மை ஆகுமோ? அவ்வாறாயின் முப்புரம் எரித்த சிவபிரான் மண்டை ஓட்டில் பிச்சை எடுத்ததை எவ்வகைத் தவம் என விளக்குவது என்றவாறு. அது தவத்தின் விளைவு அல்ல விதியின் விளைவே ஆகும் என்பதாம். சினத்தால் பிரமனின் தலையைக் கிள்ளிய சிவன், பிரம தோசத்தால் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்தமையை இங்குச் சடாயு குறிப்பிடுகின்றான். அலக்கண் - துன்பம், தலைக்கலம் - பிரமனது மண்டை ஓடு. விலக்குவம் - தன்மைப் பன்மை வினைமுற்று. தலைக்கலம் - இருபெயரொட்டு. 108 |