| 3511. | 'பொங்கு வெங்கோள் அரா, விசும்பு பூத்தன வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்; அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்த் திங்களும், ஒரு முறை வளரும் தேயுமால். |
பொங்கு வெங்கோள் அரா - (சினம்) பொங்குகிற கொடிய கொலைத் தொழிலை உடைய பாம்பாகிய (கேது); விசும்பு பூத்தன - ஆகாயத்தில் பூத்து விளங்குகிற; வெங்கதிர்ச் செல்வனை - வெப்பக் கதிர்களைச் செல்வமாகக் கொண்ட கதிரவனை; விழுங்கி நீங்குமால் - விழுங்கி உமிழும்; அம் கண் மா ஞாலத்தை - இடம் அகன்ற பெரிய நிலவுலகத்தை; விளக்கும் - தன் ஒளியால் விளங்கச் செய்கிற; ஆய்கதிர்த் திங்களும் - சிறந்த ஒளிக்கற்றைகளை உடைய நிலவும்; ஒரு முறை வளரும் தேயும் - (மாதந்தோறும்) ஒரு முறை வளர்ந்து, ஒரு முறை தேய்தலும் செய்யும். கதிரவனைக் கோள் அராத் தீண்டி மறைத்தலும், நிலவு வளர்ந்து தேய்வதும் விதியின் பயன் என்றவாறு. கதிரவனை அராத் தீண்டுதற்குக் காரணமாகப் புராணக் கதையைக் குறிப்பிடுவர். கோள் அரா - குறித்த இலக்கைக் கொல்வதில் தவறாத பாம்பு, கோள் - முதல் நிலை நீண்ட தொழிற் பெயர். மாஞாலம்- உரிச்சொல் தொடர். ஆல் இரண்டும் அசை. 109 |