3512. | 'அந்தரம் வருதலும், அனைய தீர்தலும், சுந்தரத் தோளினிர்! தொன்மை நீரவால்; மந்திர இமையவர்-குருவின் வாய் மொழி இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ? |
சுந்தரத் தோளினிர் - அழகிய தோள்களை உடையவர்களே; அந்தரம் வருதலும் - (ஒருவனுக்குத்) தீங்குகள் வந்து சேர்வதும்; அனைய தீர்தலும் - அவை நீங்குவதும்; தொன்மை நீரவால் - தொன்று தொட்டு வந்தமைகிற ஊழ்வினையின் தன்மையவாகும்; இமையவர் மந்திர குருவின் - தேவர்களுடைய மந்திரவலிமை மிக்க குருவாகிய பிரகசுபதியின்; வாய்மொழி - வாயில் இருந்து வந்த சாபச் சொற்களால்; இந்திரன் உற்றன- தேவர் தலைவனாகிய இந்திரன் அடைந்த துன்பங்களை; எண்ண ஒண்ணுமோ - எண்ணிப் பார்க்க முடியுமோ என்றபடி (முடியாது என்பது கருத்து) தொன்று தொட்டு வருகின்ற ஊழ்வினையின் பயனால் தான் ஒருவனுக்குத் துன்பங்கள் வந்து சேருகின்றன. இதை விளக்க இந்திரன் பட்ட துன்பங்களைக் கூறும் புராணச் செய்தி கூறப்படுகிறது. அந்தரம் - துன்பம், நீங்கு, நீரவால் - தன்மையவாம் அனைய, உற்றன - வினையாலணையும் பெயர்கள். இமையவர் குரு - பிரகஸ்பதி. 110 |