3513. | 'தடைக்க அரும் பெரு வலிச் சம்பரப் பெயர்க் கடைத் தொழில் அவுணனால், குலிசக்கையினான் படைத்தனன் பழி; அது, பகழி வில் வலாய்! துடைத்தனன் நுந்தை, தன் குவவுத் தோளினால். |
பகழி வில் வலாய் - அம்புகளை விடும் வில் தொழில் ஆற்றலில் வல்லவனே!; தடைக்க அரும் பெருவலி - தடுப்பதற்கு முடியாத மிக்க வலிமை உடைய; சம்பரப் பெயர் - சம்பரன் என்ற பெயர் உடைய; கடைத் தொழில் அவுணனால் - இழி தொழிலைச் செய்யும் அவுணனால்; குலிசக்கையினான் - வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய இந்திரன்; பழி படைத்தனன் - (தோல்வி அடைந்து ஆட்சியை இழத்தலாகிய) பழியை அடைந்தான்; அது - அப்பழியை; நுந்தை - உன் தந்தையாகிய தசரதன்; தன் குவவுத் தோளினால் - தன் திரண்ட தோள்களின் வலிமையால்; துடைத்தனன் - நீக்கினான். இந்திரன் சம்பரன் என்ற அசுரனால் அடைந்த பழியை உன் தந்தையாகிய தசரதன் தன் தோள் வலிமையால் போக்கினான் என்பது கருத்து. தடைக்க - தடுக்க, கடைத் தொழில் - கீழான தொழில், குலிசம் - வச்சிராயுதம், நுந்தை - உன் தந்தை தசரதன், குவவு - திரட்சி. 111 |