அறுசீர் ஆசிரிய விருத்தம்

3514.'பிள்ளைச் சொல் கிளிஅனாளைப்
     பிரிவுறல் உற்ற பெற்றி,
தள்ளுற்ற அறமும் தேவர்
     துயரமும், தந்ததேயால்;
கள்ளப் போர் அரக்கர்
     என்னும் களையினைக் களைந்து வாழ்தி;
புள்ளிற்கும், புலன்இல் பேய்க்கும்,
     தாய் அன்ன புலவு வேலோய்!

    புள்ளிற்கும் - பறவைகளுக்கும்; புலன் இல் பேய்க்கும் -பகுத்தறிவு
இல்லாத பேய்க்கும்; தாய் அன்ன - (உணவு தருவதால்)தாயைப்
போன்றதும்; புலவு வேலோய் - புலால் நாற்றம் வீசுகின்றதும் ஆகிய
வேல் படை உடையவனே!; தள்ளுற்ற அறமும் - அரக்கர்களால் ஒதுக்கப்
பெற்ற அறமும்; தேவர் துயரமும் - தேவர்கள் அடைந்த துன்பமும்
(ஆகிய இரண்டும்); பிள்ளைச் சொல் கிளி அனாளை - மழலைச் சொல்
கிளி போன்றவளாகிய சீதையை; பிரிவுறல் உற்ற பெற்றி - பிரிதல்
பொருந்திய தன்மையைத்; தந்ததே யால் - தந்தவையாகும்; கள்ளப் போர்
அரக்கர் -
வஞ்சனை உடைய போரினைச் செய்யும் அரக்கர்கள்; என்னும்
களையினைக் களைந்து வாழ்தி -
என்கின்ற (அரக்கர் என்கிற)
களையாகிய புல் பூண்டுகளை ஒழித்து வாழ்வாயாக.

     அறமும் தேவர் துயரமுமே இராவணனைச் சீதையைக் கவர்ந்து
செல்லத் தூண்டி உள்ளன; எனவே, நீ கள்ளப் போர் அரக்கர் என்கிற
களை கட்டு வாழ்க என்றபடி. இவ்வாறு அறமும் துயரமும், விதியும்
தருமமும், (1606) என்று இரட்டை இணைகளாகச் சொல்லுதல் கம்பரின் கவி
'வழக்கு என்க. பயிர் செழித்து வளரக் களை கட்டல் இன்றியமையாதது
போல் அறப் பயிர் வளர அரக்கர்களாகிய களையை அழிக்க வேண்டும்
என்பார், "போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி"
என்றார். இராமன் தக்க இன்னன தகாதது இன்னன என எண்ணாமல்
அனைத்து உயிரையும் ஒக்க நோக்கும் அருள் உடையான் என்பதைப்
"புள்ளிற்கும், புலன் இல் பேய்க்கும், தாய் அன்ன புலவு வேலோய்"
என்றார். பிள்ளைச் சொல் - மழலைப் பேச்சு. பெற்றி - தன்மை; புலன் -
அறிவு. அனாள் - வினையாலணையும் பெயர். ஆல் - அசை. வாழ்தி -
முன்னிலை ஒருமை வினைமுற்று.                               112