3515. | 'வடுக் கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும் எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து, எனது ஆற்றல்கொண்டு தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால் படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது' என்றான். |
வடுக்கண் - மாவடுவின் பிளந்தது போன்ற கண்களையும்; வார் கூந்தலாளை - நீண்ட கூந்தலையும் உடைய சீதையை; இராவணன் மண்ணினோடும் - இராவணன் நிலத்தோடு; எடுத்தனன் ஏகுவானை - எடுத்துக் கொண்டு செல்லும் போது அவனை; எதிர்ந்து - (நான்) எதிர்ப்பட்டு; எனது ஆற்றல் கொண்டு - எனது வலிமையின் துணை கொண்டு; ஆவது எல்லாம் தடுத்தனென் - ஆன மட்டும் தடுக்க முனைந்தேன்; தவத்து அரன் தந்த வாளால் - (இறுதியில் அவன்) தன் தவம் கருதிச் சிவபிரான் கொடுத்த (சந்திரகாசம் என்னும்) வாளினால்; படுத்தனன் - (என்னை) வெட்டி வீழ்த்தினான்; இங்கு வீழ்ந்தேன் - இவ்விடத்தில் விழுந்து விட்டேன்; இது இன்று பட்டது - இச் செயல் இன்று நடந்தது; என்றான் - என்று (சடாயு இராமனிடம்) கூறினான். வடு - மாவடு. வார் - நீண்ட; வார் கூந்தல் - பண்புத் தொகை. கூந்தலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர். எடுத்தனன் - முற்றெச்சம், ஆவது எல்லாம் - ஒருமை பன்மை மயக்கம். 113 |