இராமன் சீற்றம் 3516. | கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகாமுன்னம், ஊறின உதிரம், செங் கண்; உயிர்த்தன, உயிர்ப்புச் செந் தீ; ஏறின புருவம் மேல்மேல்; இரிந்தன சுடர்கள் எங்கும்; கீறினது அண்டகோளம்; கிழிந்தன கிரிகள் எல்லாம். |
கூறின மாற்றம் - (சடாயு) கூறிய சொற்கள்; சென்று செவித் தலம் குறுகாமுன்னம் - சென்று (இராமனது) காதினிடத்துச் சேருவதற்கு முன்பு; செங்கண் உதிரம் ஊறின - (முன்பே) சிவந்த கண்களில் குருதி ஊறிச் சொரிந்தன; உயிர்ப்புச் செந்தீ உயிர்த்தன - பெருமூச்சாகிய சிவந்த தீ வெளிப்பட்டன; புருவம் மேல் மேல் ஏறின - புருவங்கள் மேலும் மேலும் மேலே ஏறின; சுடர்கள் எங்கும் இரிந்தன - (கதிரவன் முதலிய) சுடர்கள் எங்கும் அஞ்சி ஓடின; அண்ட கோளம் கீறினது - அண்டமாகிய உருண்டை பிளவுபட்டது; கிரிகள் எல்லாம் கிழிந்தன - மலைகள் எல்லாம் உடைபட்டன. செம்பொருளே சினந்தால் சிதறாவோ எவையும் எங்கும்! கவிதை நெறி அறிந்தோர் இதனை வெறும் உயர்வு நவிற்சி எனக் கொண்டமையார். 114 |